கூடலூர் அருகே அரசு பஸ் மீது ஜீப் மோதல்: போக்குவரத்து பாதிப்பு
கூடலூர் அருகே அரசு பஸ் மீது ஜீப் மோதல் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கூடலூர்,
கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி காந்தி நகர், ஆரோட்டுப்பாறை, கிளன்வன்ஸ், பெரியசோலை, எல்லமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் ஓவேலிக்கு செல்லும் தார் சாலை அகலம் குறைவாக இருப்பதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக டிரைவர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். மேலும் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டன.
இந்த நிலையில் நேற்று பகல் 3.30 மணிக்கு கூடலூரில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு ஓவேலிக்கு தனியார் ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதேபோல் காந்திநகரில் இருந்து கூடலூருக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது பாலவாடி காமராஜ் நகர் அருகே ஒரு வளைவில் ஜீப்பும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஜீப்பின் முன்பாகம், பஸ்சின் பக்கவாட்டுக்குள் புகுந்து சேதம் அடைந்தது. நல்லவேளையாக இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் கூடலூர் போலீசார், போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜீப் டிரைவர் கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியது தெரிய வந்தது. இது குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் இருபுறமும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் பஸ்சுக்குள் மோதிய ஜீப்பை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள் கடும் அவதிபட்டனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறும்போது, ஓவேலி சாலையில் வாகனங்கள் சென்று வரும் வகையில் அகலப்படுத்த வேண்டும். தற்போது சாலையின் இருபுறமும் சுமார் 1 அடி உயரத்துக்கு பள்ளம் உள்ளதால் எதிரே வரும் வாகனத்துக்கு வழி விட போதிய இடம் கிடைப்பது இல்லை. எனவே சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றனர்.