ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாகனத்தில் டீசலை நிரப்பி சென்ற கும்பல்
ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாகனத்தில் டீசலை நிரப்பி சென்ற கும்பல் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு ஐ.டி.ஐ. அருகே திருச்சி செல்லும் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு ஆர்.ஆர்.குப்பத்தை சேர்ந்த சதீஷ்(வயது 21) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை பணியில் இருந்தார். அப்போது அங்கு ஜீப் ஒன்று வந்தது. அதில் டிரைவர் உள்பட 5 பேர் இருந்தனர். ஜீப்பில் இருந்து இறங்கிய டிரைவர் வாகனத்துக்குள் ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் 4 பேர் இருப்பதாகவும் உடனே டீசல் நிரப்புமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, சதீஷ் ஜீப்பில் உள்ள டேங்கில் 57 லிட்டர் டீசலை நிரப்பினார். பின்னர் அவர் டீசலுக்குரிய பணத்தை ஜீப்பில் இருந்தவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறிய டிப்–டாப் ஆசாமி ஒருவர் டீசல் தொகைக்கான ரசீது தருமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய சதீஷ் அங்குள்ள அலுவலகத்துக்குள் ரசீதை எழுதி எடுத்துவர சென்றபோது, ஜீப் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது. அப்போது தான் ஜீப்பில் வந்தவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் அதிகாரிகள் என கூறி டீசலை வாகனத்தில் நிரப்பி கொண்டு அதற்குறிய பணத்தை கொடுக்காமல் தப்பிச் சென்றதும் சதீசுக்கு தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் பாபுவுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பாபு, உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தில் டீசலை நிரப்பி பணத்தை கொடுக்காமல் சென்ற கும்பலை தேடிவருகின்றனர்.