மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்


மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 July 2017 4:15 AM IST (Updated: 3 July 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே குறிஞ்சி நகரில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள குறிஞ்சி நகரில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை சுற்றி தொம்பரகாம்பட்டி, பாளையம்புதூர், சாமிசெட்டிப்பட்டி, வெள்ளக்கல், நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மதுகுடிக்க வருபவர்கள் இந்த வழியாக செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை கேலி கிண்டல் செய்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடையை அகற்றக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது மதுக்கடையை மூட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் அதிகாரிகள் கொடுத்த கெடு முடிந்தும் மாவட்ட நிர்வாகம் மதுக்கடையை மூடவில்லை.

எழுத்து மூலம் உறுதி

இந்தநிலையில் நேற்று பிற்பகல் டாஸ்மாக் ஊழியர்கள் மதுக்கடையை திறக்க வந்தனர். இதையறிந்த பெண்கள், பொதுமக்கள் கடை முன்பு திரண்டு மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், கடையை அகற்றக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், நல்லம்பள்ளி மண்டல துணை தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது மதுக்கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். அப்போது நாளை (செவ்வாய்க்கிழமை) க்குள் இந்த கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் எழுத்து மூலம் பொதுமக்களிடம் எழுதி கொடுத்து உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story