முதுகலை ஆசிரியர் பணிக்கு 9,086 பேர் தேர்வு எழுதினர் 677 பேர் வரவில்லை


முதுகலை ஆசிரியர் பணிக்கு 9,086 பேர் தேர்வு எழுதினர் 677 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 3 July 2017 4:30 AM IST (Updated: 3 July 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 186 மாற்றுத்திறனாளிகள் உள்பட 9,086 பேர் எழுதினர். 677 பேர் தேர்வு எழுத வரவில்லை.

வேலூர்,

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 9,763 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 26 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 677 பேர் நேற்று தேர்வு எழுதவரவில்லை. இவர்கள் தவிர 9,086 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 38 பார்வையற்றவர்கள் உள்பட 186 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதினர். பார்வையற்றவர்கள் தேர்வு எழுதுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

கலெக்டர் ஆய்வு

வேலூரில் உள்ள ஈ.வெ.ரா. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான தேர்வை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 26 மையங்களில் முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான தேர்வு நடத்தப்பட்டது. காவல்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 5 பறக்கும்படை அமைக்கப்பட்டு தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தேர்வர்களுக்கு வசதியாக போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி, தடையில்லா மின்சார வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், தாசில்தார் பழனி ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story