முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை 3 ஆயிரத்து 521 பேர் எழுதினர்


முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை 3 ஆயிரத்து 521 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 3 July 2017 4:15 AM IST (Updated: 3 July 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களுக்கான எழுத்து தேர்வை 3 ஆயிரத்து 521 பேர் எழுதினர்.

கரூர்,

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. கரூர் மாவட்டத்தில் காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட மொத்தம் 10 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை எழுத தமிழ், ஆங்கிலம், பொருளியல், உடற்கல்வியியல், கணிதம், விலங்கியல், வேதியியல், தாவரவியல் உள்பட 12 பாடப்பிரிவுகளில் 57 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்பு கடிதம் ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தன. தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையத்திற்கு நேற்று காலையிலே தேர்வர்கள் வரத்தொடங்கினர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தது.

253 பேர் எழுதவில்லை

கரூர் மாவட்டத்தில் நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வினை மொத்தம் 3 ஆயிரத்து 521 பேர் எழுதினர். 253 பேர் தேர்வு எழுதவரவில்லை. கரூர் காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தேர்வு பணிகளுக்காக வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் சொல்வதை எழுதுபவர் என 353 பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படை குழு அமைக்கப்பட்டிருந்தது. குழுவினர் தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

சிறப்பு அனுமதி

தாந்தோன்றிமலையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் விபத்தில் காயமடைந்ததால் கையில் கட்டுப்போட்டிருந்தார். இதனால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணிடம் அவர் சிறப்பு அனுமதி பெற்று தேர்வு எழுத உதவியாளர் ஒருவரை கேட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு தேர்வு பணியாளர் ஒருவர் உதவியாளராக நியமிக்கப்பட்டார். கேள்விகளுக்கு ராமச்சந்திரன் சொன்ன பதிலை உதவியாளர் எழுதினார்.


Related Tags :
Next Story