மானை வேட்டையாட முயன்ற சிறுத்தைப்புலி கிணற்றுக்குள் விழுந்தது வனத்துறையினர் மீட்டனர்


மானை வேட்டையாட முயன்ற சிறுத்தைப்புலி கிணற்றுக்குள் விழுந்தது வனத்துறையினர் மீட்டனர்
x
தினத்தந்தி 3 July 2017 4:45 AM IST (Updated: 3 July 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகில் மானை வேட்டையாட முயன்ற சிறுத்தைப்புலி கிணற்றுக்குள் விழுந்தது. வனத்துறையினர் ஏணி அமைத்து சிறுத்தைப்புலியை மீட்டனர்.

விக்கிரமசிங்கபுரம்,


நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசம் காரையாறு என்ற இடம் உள்ளது. இங்கு புலி, சிறுத்தைப்புலி, யானை, மான், மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இந்த பகுதியில் காணிகுடியிருப்பு என்ற இடம் உள்ளது. மலைப்பகுதியில் உள்ள இந்த இடத்தில் காணிக்காரர்கள் என்ற மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்கள் தங்களுக்கு தேவையானதை விளைவித்து கொள்ள ஊருக்கு பின்புறம் கிணறு வெட்டி தோட்டம் ஒன்றும் அமைத்து இருந்தனர். தற்போது தோட்டத்தில் எதுவும் பயிரிடப்படாமல் உள்ளது. கிணறும் பயன்பாடு இல்லாமல் தண்ணீர் பாசிப்படிந்து கிடக்கிறது.

உறுமல் சத்தம்


அந்த கிணற்றின் வழியாக ரஞ்சித்குமார் என்ற காணிக்காரர் சென்றார். அப்போது உறுமல் சத்தம் கேட்டது. ஏதோ விலங்கின் உறுமல் சத்தம் கேட்கிறதே என நினைத்த ரஞ்சித்குமார் அங்கும், இங்கும் ஏதாவது விலங்கு தென்படுகிறதா? என தேடிப்பார்த்தார். கிணற்றுக்குள் ஒரு பாறையில் சிறுத்தைப்புலி ஒன்று படுத்து கிடந்தது.

இதுபற்றி ரஞ்சித்குமார் உடனடியாக முண்டந்துறை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனச்சரகர்கள் கார்த்திகேயன் (முண்டந்துறை), பாரத் (பாபநாசம்) ஆகியோர் தலைமையில் வனவர் மோகன்தாஸ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஏணி அமைத்து மீட்டனர்


கிணற்றுக்குள் இருந்து சிறுத்தைப்புலியை மீட்கும் முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டனர். அதாவது 30 அடி நீளம் கொண்ட 3 மூங்கில் கம்புகள் மூலம் ஏணி ஒன்றை உடனடியாக தயார் செய்தனர். அந்த ஏணியை கிணற்றின் மேல் பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி இருக்கும் இடத்தை நோக்கி வைத்தனர். கம்பை வைத்து தன்னை தாக்குகிறார்களோ என நினைத்த சிறுத்தைப்புலி, முதலில் கம்பை கடித்து சேதப்படுத்தியது. உடனே வனத்துறையினர் மூங்கில் கம்பை வெளியே எடுத்து விட்டு, மீண்டும் கயிறு மூலம் 3 கம்புகளையும் இறுகலாக கட்டி சிறுத்தைப்புலி இருக்கும் பகுதியை நோக்கி மீண்டும் வைத்தனர்.

பின்னர் வனத்துறையினர் அங்குள்ள ஒரு இடத்தில் மறைந்து இருந்து சிறுத்தைப்புலி கிணற்றை விட்டு வெளியே வருகிறதா என்று பார்த்தனர். சிறிது நேரத்தில் வனத்துறையினர் கம்புகளால் அமைத்த ஏணியில் ஏறி சிறுத்தைப்புலி கிணற்றை விட்டு வெளியே வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடியது. இந்த சம்பவம் காணிக்குடியிருப்பு பகுதியில் நேற்று திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

35 அடி ஆழ கிணறு


இதுபற்றி வனத்துறையினர் கூறியதாவது:–

பாபநாசம் மலையில் காணிகுடியிருப்பு பகுதியில்தான் ஏராளமான மான்கள் உள்ளன. இங்குள்ள மான்களை வேட்டையாடுவதற்காக மலைப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலிகள் அடிக்கடி வருவதும், மான்களை வேட்டையாடி செல்வதும் வழக்கம். அதுபோல் நேற்று முன்தினம் இரவில் மலைப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி ஒன்று மானை வேட்டையாடுவதற்காக காணிகுடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது. மானை வேட்டையாடும் போது பாய்ந்து சென்று பிடிக்கும். அப்போது அங்குள்ள 35 அடி ஆழ கிணற்றுக்குள் சிறுத்தைப்புலி தவறி விழுந்துள்ளது.

பின்னர் சிறுத்தைப்புலி கொஞ்சம் கொஞ்சமாக நீந்தி கிணற்றில் உள்ள சிறு சிறு இடைவெளி மூலமாக சுமார் 10 அடி உயரம் வரை கிணற்றில் ஏறியது. அதன்பிறகு கிணற்றின் பக்கவாட்டு சுவரில் இடைவெளி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. எனவே கிணற்றுக்கு உள்ளே உள்ள ஒரு பாறையில் சிறுத்தைப்புலி அப்படியே படுத்து கிடந்தது. கம்புகளால் ஏணி அமைத்து சிறுத்தைப்புலி மீட்கப்பட்டு காட்டுக்குள் விடப்பட்டது. இதேபோன்று 10 ஆண்டுகளுக்கு முன்பும் சிறுத்தைப்புலி ஒன்று இதே கிணற்றுக்குள் விழுந்தது. அப்போதும் ஏணி மூலம்தான் சிறுத்தைப்புலி மீட்கப்பட்டது. சிறுத்தைப்புலி விழுந்து கிடந்த கிணறானது பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு அருகில் உள்ளது என்றனர்.


Next Story