காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தாவிட்டால் ‘கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’


காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தாவிட்டால் ‘கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’
x
தினத்தந்தி 3 July 2017 5:15 AM IST (Updated: 3 July 2017 4:14 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகம், கர்நாடகம் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

மண்டியா,

கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளாக காவிரி நடுவர் மன்றம் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காமல் இருந்து வருகிறது. அதற்கு கர்நாடகத்தில் போதிய மழை பெய்யவில்லை எனவும், இதனால் கர்நாடகத்தில் வறட்சி நிலவுவதாகவும் காரணம் கூறி வருகிறது. அதேபோல நடப்பு ஆண்டிலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய போதிய தண்ணீரை கர்நாடகம் வழங்கவில்லை.

இதனால் தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்து விட காவிரி டெல்டா விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டம் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப் பட்டணாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தண்ணீர் திறப்பு

இந்த நிலையில், கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி இரவு முதல் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து விவசாயிகள், கன்னட அமைப்பினர், மாணவர்கள் மண்டியா, மைசூரு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஓடும் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் கே.ஆர்.எஸ். அணையை முற்றுகையிட சென்ற விவசாயிகள், கன்னட அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் கே.ஆர்.எஸ். அணை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது, வினாடிக்கு 2,673 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல, மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் (மொத்த நீர்மட்டம்- 124.80 அடி) நீர் இருப்பு 73.75 அடி ஆகும். அணைக்கு வினாடிக்கு 6,567 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதேவேளையில், வினாடிக்கு 2,673 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

3-வது நாளாக போராட்டம்

இதனை கண்டித்து 3-வது நாளாக நேற்றும் மண்டியா மாவட்டத்தில் மத்தூர், மலவள்ளி, ஸ்ரீரங்கப்பட்டணா, நாகமங்களா, பாண்டவபுரா மற்றும் மைசூரு மாவட்டத்திலும் விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் மண்டியாவில் உள்ள காவிரி நீர்பாசனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீரங்கப்பட்டணா அருகே இன்டுவாலு கிராமத்தில் செல்லும் மைசூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, மத்தூர் அருகே கெஞ்சலகெரே, ஸ்ரீரங்கப்பட்டணா அருகே கலசதவாடி ஆகிய பகுதிகளில் செல்லும் மைசூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளின் போராட்டத்தால் மைசூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது. இருப்புறங்களிலும் சாலைகள் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்

இதுகுறித்து விவசாய சங்கத்தலைவர் மாதேகவுடா கூறுகையில், கர்நாடக விவசாயிகள் தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த வேலையில் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. தமிழகத்திற்கு திறக்கும் தண்ணீரை அரசு நிறுத்த வேண்டும். காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்தவில்லை என்றால் மாநில அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து மண்டியா போலீசார் விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்து அங்கிருந்து வேனில் ஏற்றி சென்றனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story