ஆதிதிராவிடர்களின் வீடுகளுக்கு நாங்கள் செல்வதை காங்கிரஸ் கட்சியினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை எடியூரப்பா பேட்டி


ஆதிதிராவிடர்களின் வீடுகளுக்கு நாங்கள் செல்வதை காங்கிரஸ் கட்சியினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 3 July 2017 4:20 AM IST (Updated: 3 July 2017 4:19 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர்களின் வீடுகளுக்கு நாங்கள் செல்வதை காங்கிரஸ் கட்சியினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா முன்னிலையில் முன்னாள் மந்திரி கிருஷ்ணய்யஷெட்டி நேற்று பா.ஜனதாவில் சேர்ந்தவர். பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவருக்கு கட்சி கொடியை கொடுத்து பா.ஜனதாவில் எடியூரப்பா சேர்த்துக் கொண்டார். இதில் எடியூரப்பா பேசியதாவது:-

நான் மாநிலம் முழுவதும் மக்கள் தொடர்பு சுற்றுப்பயணத்தை நடத்தி இருக்கிறேன். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆதிதிராவிடர்களின் வீடுகளில் நாங்கள் உணவு சாப்பிட்டது அந்த மக்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆதிதிராவிடர்களின் வீடுகளுக்கு நாங்கள் நாங்கள் செல்வதை காங்கிரஸ் கட்சியினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.

நீண்ட நாட்களுக்கு நீடிக்காது

காங்கிரசாரின் ஆட்டம் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. முன்னாள் மந்திரி கிருஷ்ணய்யஷெட்டி பா.ஜனதாவில் சேர்ந்தது கட்சிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. நமது தொண்டர்கள் கட்சியை பூத் மட்டத்தில் பலப்படுத்தும் பணியில் இறங்க வேண்டும். 150 தொகுதிகளில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளோம். இதற்காக தொண்டர்கள் தீவிர கட்சி பணியாற்ற வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியின் தவறான நிர்வாகத்தால் அக்கட்சியில் உள்ளவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் பா.ஜனதாவில் சேர ஆர் வமாக உள்ளனர். வரும் நாட்களில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் பா.ஜனதாவில் சேருவார்கள். பிரதமர் மோடி சரக்கு-சேவை வரி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் அவர் ஒரு புரட்சிகரமான பொருளாதார சீர்திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஆதரவு திரட்டுகிறார்

எங்கள் கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக போட்டியிட்டுள்ள ராம்நாத் கோவிந்த் 5-ந் தேதி பெங்களூரு வருகிறார். அன்றைய தினம் கட்சி அலுவலகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டுகிறார். பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

பா.ஜனதாவில் சேர்ந்த பிறகு கிருஷ்ணய்யஷெட்டி பேசுகையில், “ஒரு முறை இந்த கட்சியை விட்டு வெளியேறி தவறை செய்துவிட்டேன். இதே தவறை மீண்டும் செய்ய மாட்டேன். நான் கட்சியை பலப்படுத்த முயற்சி செய்வேன்“ என்றார்.

Next Story