ஜி.எஸ்.டி. குறித்து வியாபாரிகள் இடையே குழப்பமா? பெரும்பாலான இடங்களில் நடைமுறைக்கு வரவில்லை
ஜி.எஸ்.டி. குறித்து வியாபாரிகள் இடையே குழப்பம் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் நடைமுறைக்கு வரவில்லை.
மும்பை,
மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என கூறப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நேற்று முன்தினம் அதிகாலை முதல் அமலுக்கு வந்தது. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் அமல் படுத்துவதற்கு முன்பே கடும் எதிர்ப்புகளை சந்தித்தது.
நேற்று முன்தினம் முதலே மும்பையில் பெரும்பாலான பெரிய வகையிலான ஓட்டல்களில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமலுக்கு வந்தது. எனினும் இதனால் பெரியளவில் பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது. ‘‘தற்போது வாடிக்கையாளரின் வருகையில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல வந்து செல்கின்றனர். திங்கள் கிழமைக்கு பிறகு தான் ஜி.எஸ்.டி.யின் தாக்கம் தெரியவரும்’’ என ஜூகுவில் ஓட்டல் நடத்தி வரும் அரவிந்த் ஷெட்டி என்பவர் கூறினார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஆயத்த ஆடைகளின் விலை உயரும் என கூறப்படுகிறது. இதனால் மும்பையில் உள்ள மொத்த விலை துணிக்கடைகள் களையிழந்து உள்ளன. ஜி.எஸ்.டி.க்கு எதிராக சமீபத்தில் துணி வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து துணி வியாபாரிகள் சங்க நிர்வாகி ராய்சந்த் பினாகியா கூறும்போது, ஜவுளித்துறையை அழிக்கும் வகையிலான இந்த வரி விதிப்பு முறையால் வியாபாரிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர், என்றார்.
ஜி.எஸ்.டி. வரி முறையால் தோல் உற்பத்தி பொருட்களின் விலையும் உயருகிறது. ரூ.100–க்கு விற்கப்பட்ட தோல் பணப்பை இனிமேல் ரூ.114–க்கு விற்பனை செய்யப்படும். இதுகுறித்து தாராவியை சேர்ந்த தோல் பொருள் விற்பனையாளர் ராஜேஷ்வர் கூறும்போது:–
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த போது தோல் பொருள் உற்பத்தி தொழில் முடங்கியது. அதில் இருந்தே நாங்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இந்தநிலையில் தோல் உற்பத்தி பொருட்களுக்கு 28 சதவீத வரி விதித்து உள்ளது மிகப்பெரிய அடியாக உள்ளது. 2 நாட்களாக தோல் பொருட்கள் வாங்க எந்த வியாபாரிகளும் எங்களை அணுகவில்லை என கவலையுடன் கூறினார்.
வியாபாரிகள் குழப்பம்இந்தநிலையில் அமலுக்கு வந்துள்ள ஜி.எஸ்.டி. வர்த்தகர்கள், வியாபாரிகள் இடையே அதிகளவு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே நேற்று வரை பெரும்பாலான கடைகளில் ஜி.எஸ்.டி. அமலுக்குவரவில்லை. குறிப்பாக சிறிய வகை ஓட்டல்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்யப்படவில்லை. ஏற்கனவே இருந்த விலையில் தான் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து மராட்டிய தொழில் மற்றும் வர்த்தக சபை தலைவர் மோகன் குர்னானி கூறும்போது, ‘‘ஜி.எஸ்.டி. தற்போது தான் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து வியாபாரிகளிடம் குழப்பமான மனநிலையே நிலவி வருகிறது. இதுகுறித்து அரசிடம் பேசி வருகிறோம்’’ என்றார்.
தாராவி உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள் சங்க பொருளாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை பற்றி இன்னும் முழுமையாக தெரியாது. எனவே முதலில் அரசு இதுகுறித்து வியாபாரிகளிடம் விளக்க வேண்டும். அதன் பிறகே வரிவிதிப்பு முறையில் கடுமையான நடவடிக்கைகளை கையாள வேண்டும், என தெரிவித்தார்.
கருத்தரங்குகள் நடத்தப்படும்இந்தநிலையில் நேற்று முன்தினம் மும்பை மஜ்காவ்வில் உள்ள விற்பனை வரித்துறை அலுவலகத்தை ‘ஜி.எஸ்.டி. பவன்’ ஆக மாற்றும் விழா நடந்தது. இதில் பேசிய விற்பனை வரித்துறை கமிஷனர் ராஜூவ் ஜலோட்டா, ‘‘ஜி.எஸ்.டி. குறித்த அடிப்படை மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான தகவல்களை வழங்க கருத்தரங்குகள் நடத்தி வருகிறோம். எங்களிடம் திறமையான பயிற்சியாளர்கள் உள்ளனர். ஆனால் அதிக எண்ணிக்கையில் இல்லை.
எனினும் எல்லாப்பகுதிகளிலும் மேலும் 2 அல்லது அதற்கும் மேற்பட்ட மாதங்களுக்கு ஜி.எஸ்.டி. குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்த முடிவு செய்து உள்ளோம்’’ என்றார்.
ஆடிட்டர்களுக்கு கிராக்கி...ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை வியாபாரிகள் மட்டுமின்றி ஒட்டு மொத்த மக்களிடமும் ஒருவித குழப்பதை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பலர் இதுகுறித்து விளக்கம் பெற ஆடிட்டர்களை நோக்கி ஓடுகின்றனர். இதனால் மும்பையில் ஆடிட்டர்களுக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது. தற்போது மும்பையில் உள்ள அனைத்து ஆடிட்டர்கள், பொருளாதார வல்லுனர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
ஆக்ட்ராய் வரி சோதனை சாவடிகள் போலீஸ் சோதனை சாவடிகளாக மாறுகிறது
வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து மும்பைக்கு கொண்டு வரப்படும் பொருட்களுக்கு ஆக்ட்ராய் வரி செலுத்த வேண்டும். இது மும்பை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக இருந்தது. இந்தநிலையில் ஜி.எஸ்.டி. வரி வசூல் முறை அமலுக்கு வந்ததால் ஆக்ட்ராய் வரி வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆக்ட்ராய் வரி சோதனை சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அங்கு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். தகிசர், வாஷி, முல்லுண்டு, ஐரோலி ஆக்ட்ராய் வரி சோதனை சாவடிகள் போலீஸ் சோதனை சாவடிகளாக மாற்றப்பட உள்ளது. சோதனை சாவடிகளில் பணியில் இருக்கும் போலீசார் சந்தேகப்படும் வாகனங்களை சோதித்த பிறகே மும்பைக்குள் செல்ல அனுமதிப்பார்கள்.
இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் தத்தா பட்சல்கிகர் கூறியதாவது:-
பாதுகாப்பு காரணங்களுக்காக ஆக்ட்ராய் வரி சோதனை சாவடிகளை போலீஸ் சோதனை சாவடிகளாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மும்பையில் செயல்பட்டு வரும் கணக்கியல் நிறுவன உரிமையாளர் கூறும்போது:– எங்களது வாடிக்கையாளர்கள் ‘பில்லிங்’ முறையை எப்படி மாற்றுவது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். வியாபாரிகள் அவர்களது பில்லிங் தொடர்பான மென்பொருள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை என புகார் அளித்து வருகின்றனர், என்று தெரிவித்தார்.