வேளச்சேரியில் 7 ஆண்டுகளாக மக்கள் பயன்பாடு இன்றி முடங்கி இருக்கும் சமூக நலக்கூடம்
வேளச்சேரியில் 7 ஆண்டுகளாக மக்கள் பயன்பாடு இன்றி முடங்கி இருக்கும் சமூக நலக்கூடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை நகர மேயராக இருந்தபோது வேளச்சேரி சேவா நகரில் சமூக நலக்கூடம் திறக்கப்பட்டது. இந்த கூடம் அப்பகுதியில் உள்ள ஏழை, நடுத்தர மக்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை குறைந்த செலவில் நடத்த உதவியாக இருந்தது. இந்நிலையில் இந்த சமூக நலக்கூடம் 2010–ம் ஆண்டு இழுத்து மூடப்பட்டது. தற்போது பாழடைந்த கட்டிடம் போல அது காட்சி அளிக்கிறது.
இதுகுறித்து வேளச்சேரி பொன்விழா இளைஞர் நற்பணி மன்ற நிறுவனரும், எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானியுமான டாக்டர் என்.பரசுராமன் கூறியதாவது:–
தி.மு.க. ஆட்சி காலத்தில் இலவச தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கும் அறையாக வேளச்சேரி சமூக நலக்கூடம் மாற்றப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. ஆட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் இடமாக மாறியது.
மக்கள் பயன்பாட்டுக்குரிய சமூக நலக்கூடத்தை பொருட்கள் வைக்கும் அறையாக பயன்படுத்த கூடாது. எனவே அதனை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர்களாக இருந்தவர்களிடம் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
ஆனாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக வேளச்சேரி சமூக நலக்கூடம் மக்கள் பயன்பாடு இன்றி முடங்கி இருக்கிறது. எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சமூக நலக்கூடத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும்.
வேளச்சேரி சேவா நகரில் 1991–ம் ஆண்டு உலக வங்கி நிதி உதவியுடன் சிறந்த அறுவை சிகிச்சை கருவிகளுடன் 30 படுக்கைகளுடன் மகப்பேறு ஆஸ்பத்திரி திறக்கப்பட்டது. இந்த ஆஸ்பத்திரியில் சிறப்பான உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வேளச்சேரி மட்டுமின்றி பள்ளிக்கரணை, தரமணி போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களும் இங்கு சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் இந்த ஆஸ்பத்திரியும் 2012–ம் ஆண்டு முதல் முறையாக செயல்படுவது இல்லை. ஆஸ்பத்திரியில் இருந்த நவீன மருத்துவ கருவிகள் அடையாறு, திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு விட்டது. தற்போது சிகிச்சைக்காக வேளச்சேரி பகுதி பெண்கள் சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள மகப்பேறு ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் பிரச்சினை வேளச்சேரி பகுதியில் தலைவிரித்தாடுகிறது. தண்ணீருக்காக மக்கள் பரிதவிக்கும் நிலை உள்ளது. எனவே மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.