கேளிக்கைவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் 178 திரையரங்குகள் மூடப்பட்டன


கேளிக்கைவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் 178 திரையரங்குகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 4 July 2017 3:45 AM IST (Updated: 4 July 2017 1:35 AM IST)
t-max-icont-min-icon

கேளிக்கைவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் உள்ள 178 திரையரங்குகள் மூடப்பட்டன என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க செயலாளர் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம்,

தமிழகம் முழுவதும் 30 சதவீதம் கேளிக்கைவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சினிமா தியேட்டர்கள் நேற்று மூடப்பட்டு, அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. அதில் மாவட்டத்தில் உள்ள 178 தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் தியேட்டர் தொழிலை சார்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிப்படைந்தனர். இது குறித்து மதுரை மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் மணிவர்மா கூறியதாவது:– ஜி.எஸ்.டி. வரியை வரவேற்கிறோம்.

அதே சமயம் மாநகராட்சிக்கு 30 சதவீதம் கேளிக்கைவரி என்பது ஏற்று கொள்ள முடியாது. நாடு முழுவதும், ஒரே வரி என்று கூறப்படும் நிலையில், தியேட்டர்களுக்கு மட்டும் கேளிக்கைவரி என்று 2–வது வரி கட்டுவது எவ்வாறு சாத்தியமாகும்?. மாவட்டத்தை பொறுத்தவரை 350 திரையரங்குகள் இயங்கி வந்தன. ஆனால் தற்போது 178 தான் இயக்கப்படுகின்றன. மீதி உள்ள தியேட்டர்கள் இருந்த இடம் இல்லாமல் போய் விட்டது. காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர்கள் நலிவடைந்து வருகின்றன.

இந்தநிலையில் மக்களின் பொழுது போக்கு அம்சமான தியேட்டர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் பொழுது போக்கிற்கு 30 சதவீதம் வரிவிதிக்கப்பட்டு இருப்பது, தியேட்டர்களின் உயிர் நாடியை பறிப்பது போல உள்ளது.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில அரசுகள் தியேட்டர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் கேளிக்கைவரியால் தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமல்லாது, அதைச்சார்ந்த அனைத்து தரப்பு தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சம் என்பது இல்லாத நிலை ஏற்படும். ஆகவே அரசு கேளிக்கைவரியை உடனே ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story