ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை 3 வருடத்திற்குள் நிறைவேற்றுவோம்: நாராயணசாமி உறுதி


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை 3 வருடத்திற்குள் நிறைவேற்றுவோம்: நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 4 July 2017 4:00 AM IST (Updated: 4 July 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை 3 வருடத்திற்குள் நிறைவேற்றுவோம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்தார்.

புதுச்சேரி,

கடந்த கால என்.ஆர்.காங்கிரஸ் அரசில் கிடப்பில் போடப்பட்ட 2 திட்டங்களுக்கு நாங்கள் இப்போது ஒப்புதல் பெற்றுள்ளோம். அதாவது ஸ்மார்சிட்டி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம்தான் அவை. இதுதொடர்பாக நான், அமைச்சர்கள், அதிகாரிகள் டெல்லி சென்று பலமுறை மத்திய மந்திரிகளை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம்.

கடந்த கால என்.ஆர்.காங்கிரஸ் அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சேதராப்பட்டு பகுதியில் கொண்டுவர திட்டமிட்டது. ஆனால் அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் நாங்கள் அதை புதுவை நகரப்பகுதிக்கு மாற்றி திட்டங்கள் தயாரித்தோம்.

தற்போது பிரெஞ்சு அரசு ஒத்துழைப்புடன் ரூ.1,850 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கான செலவினை புதுவை அரசு, மத்திய அரசு, பிரெஞ்சு அரசு ஆகியோர் தலா ரூ.500 கோடியை ஏற்றுக்கொண்டுள்ளோம். மேலும் ரூ.350 கோடி வெளிக்கடன் பெற உள்ளோம். இந்த திட்டத்தை 3 வருடத்திற்குள் நிறைவேற்றுவோம்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான போட்டியில் 49 நகரங்கள் கலந்துகொண்டன. அதில் 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் 9–வது இடத்தில் புதுச்சேரி தேர்வாகி உள்ளது.

மேலும் புதுவை நகரப்பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க பிரான்சு நாட்டு வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் கடன்பெற்று திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தோம். ரூ.534 கோடியில் நிறைவேற்றப்பட உள்ள இந்த திட்டத்துக்கு பிரான்சு நாட்டு வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் ரூ.455 கோடி கடனாக பெறப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் டெல்லியில் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த திட்டத்தை 5 ஆண்டுகளில் முடித்து புதுவை நகரப்பகுதிகளுக்கு தேவையான குடிநீரை நல்ல தரத்திலும் அளவிலும் குறைபாடின்றி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கடன் குறைந்த வட்டியில் பெறப்பட உள்ளது. மாநிலம் முழுவதிலும் குடிநீர் மேம்பாடு, பாதாள சாக்கடை திட்டம் போன்றவை ரூ.1,400 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக முதல்கட்டமாக தற்போது ரூ.534 கோடிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுவரை ரூ.3,250 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளோம்.

இந்த 2 திட்டங்களும் கடந்த கால என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டவை. அதை நாங்கள் இப்போது நிறைவேற்றியுள்ளோம்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

அவரிடம் தியேட்டர்களில் கேளிக்கை வரி குறைக்கப்படுமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு கேளிக்கை வரியை குறைத்தால் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாது என்று தெரிவித்தார். சரக்கு சேவை வரியை காரணம் காட்டி சிறு கடைகளில் கூட விலையை ஏற்றி விட்டார்களே? என்று கேட்டதற்கு, இதுதொடர்பாக வணிக வரித்துறையினரை வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் புதுவைக்கு கிடைத்ததை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் பூங்கொத்து கொடுத்து முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், அரசு செயலாளர்கள் நரேந்திரகுமார், ஜவகர், மிகிர்வரதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story