புதுவை சட்டசபையை சென்டாக் மாணவர்–பெற்றோர் சங்கத்தினர் முற்றுகை
புதுவை சட்டசபையை சென்டாக் மாணவர், பெற்றோர் நலச்சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி,
புதுவை சென்டாக் மாணவர்–பெற்றோர் நலச்சங்கத்தினர் நேற்று புதுவை சட்டசபைக்கு வந்தனர். அவர்கள் ஒட்டுமொத்தமாக சட்டசபைக்குள் செல்ல முயன்றனர். ஆனால் சட்டமன்ற காவலர்கள் அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்தனர். இதனால் சட்டமன்றத்தின் மெயின்கேட்டை முற்றுகையிட்டவாறு அவர்கள் நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது நிர்வாகிகள் சிலரை மட்டும் அனுமதிப்பதாக தெரிவித்தனர்.
இதனால் பெற்றோர்கள் அங்கிந்து கலைந்து சென்று பாரதி பூங்கா அருகே சென்றனர். அவர்களில் சிலரை மட்டும் போலீசார் உள்ளே அழைத்து சென்றனர். அவர்கள் முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், சென்டாக் மருத்துவ கலந்தாய்வின்போது காரைக்கால், மாகி, ஏனாம் மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல் புதுச்சேரி பிராந்திய மாணவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தைப்போல் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.