வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு உலர் தீவனம் வழங்க வேண்டும்


வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு உலர் தீவனம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 4 July 2017 4:15 AM IST (Updated: 4 July 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு உலர் தீவனம் வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பெருங்களூர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், கடந்த 20 ஆண்டுகளாக பெருங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாராப்பூர் சாலை வெள்ள வெட்டான்விடுதி பஸ் நிறுத்தம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் 250 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது வறட்சி காரணமாக ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வராததால், எங்கள் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அதே இடத்தில் தற்போது தாய் திட்டத்தின் கீழ் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கும்பணி நடைபெற்ற போது, மட்டையன்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலரும், வெள்ளவெட்டான்விடுதி கிராமத்தை சேர்ந்த சிலரும் தடுத்து நிறுத்தினார்கள். எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கி, எங்கள் பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வழிவகை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் வருகிற 6-ந் தேதி பெருங்களூரில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என கூறியிருந்தனர்.

இதைப்போல புதுக்கோட்டை அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள அய்யனார் கோவில் எதிரில் உள்ள திடலில் வருகிற 23-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்து உள்ளோம். மேற்கண்ட இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்கனவே மாவட்ட அரசிதழில் இடம் பெற்றுள்ளது. எனவே மேற்கண்ட இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும். மேலும் நாங்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்துவோம் என கூறியிருந்தனர்.


இதைப்போல இலுப்பூர் தாலுகா எண்ணை ஊராட்சி மேலப்பட்டி கிராம பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு உலர்தீவனம் ஒரு சிலருக்கே வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் நாங்கள் அனைவரும் கால்நடைகளுக்கு தீவனம் இல்லாததால் கால்நடைகளை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே எங்கள் கிராமத்தில் இருந்து மனு கொடுத்து உள்ள அனைவருக்கும் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு உலர் தீவனம் வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story