நெருக்கடி காலத்தில் இருந்தது போல கதிராமங்கலத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர்


நெருக்கடி காலத்தில் இருந்தது போல கதிராமங்கலத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர்
x
தினத்தந்தி 4 July 2017 4:15 AM IST (Updated: 4 July 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

நெருக்கடி காலத்தில் இருந்தது போல கதிராமங்கலத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார்.

கும்பகோணம்,

தமிழகத்தில் ஊழல் புரையோடி உள்ளது. இதை பற்றி அதிகாரப்பூர்வமாக வருமானவரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக வெளியிட்டும், ஊழல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், லோக் அயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்தார். நாட்டில் பல மாநிலங்களில் இந்த சட்டம் கொண்டு வந்திருந்தாலும், தமிழக அரசு தொடர்ந்து நிறைவேற்றாமல் உள்ளது.

மோடி அரசு தங்களது 3 ஆண்டுகால ஆட்சியை ஊழலற்ற ஆட்சி என்று சாதனையாக கூறிவருகிறது. அது உண்மை என்றால், லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. தமிழக அரசு மத்திய அரசுக்கு பணிந்து செல்கிறது. மக்கள் நலன்களையும், மாநில உரிமைகளையும் விட்டு விட்டு தங்களது பதவிகளை தக்க வைத்து கொள்ள, மாநில அரசு செயல்படுகிறது. மொத்தத்தில் அ.தி.மு.க. அரசு செயல்படாத அரசாக உள்ளது.

தமிழக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது. கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.ன்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், போராடும் மக்கள் மீது போலீசாரை ஏவி விட்டு தடியடி நடத்தி, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கதிராமங்கலத்தில் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடிய வில்லை. நெருக்கடி காலத்தில் இருந்தது போல, அவதிப்படுகின்றனர். மக்களை பார்த்து ஆறுதல் கூற அரசியல் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சென்றால், அவர்களை தடுத்து கைது செய்கின்றனர்.

தஞ்சையில் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் வருகிற 9-ந்தேதிக்குள், கதிராமங்கலத்தில் இருந்து போலீசார் வெளியேற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அப்படி இல்லை எனில் வருகிற 10-ந் தேதியன்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஒன்று திரண்டு கதிராமங்கலத்திற்குள் செல்வோம். இதனால் அங்கு பல்வேறு விளைவுகள் ஏற்படும். எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, முன்னாள் எம்.எல்.ஏ. சிவபுண்ணியம், மாவட்ட செயலாளர் திருஞானம், நிர்வாகிகள் செங்கோடன், பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story