திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருசாபிஷேக விழா


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருசாபிஷேக விழா
x
தினத்தந்தி 4 July 2017 4:00 AM IST (Updated: 4 July 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதேபோன்று தை மாதம் உத்திர தினத்தன்று மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே ஆண்டுதோறும் ஆனி வருசாபிஷேகம், தை உத்திர வருசாபிஷேகம் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆனி வருசாபிஷேக விழா நேற்று கொண்டாடப்பட்டது.

அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை கும்பங்களுக்கும், குமரவிடங்க பெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்துக்கும், பெருமாள் சன்னதி முன்பு பெருமாள் கும்பத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட கும்ப கலசங்கள் கோவில் விமான தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 9.30 மணி அளவில் மூலவர், சண்முகர், பெருமாள் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் வள்ளி, தெய்வானை விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றி வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

விழாவில் கோவில் உதவி ஆணையர் அருணாசலம், உள்துறை கண்காணிப்பாளர்கள் ராஜ்மோகன், பத்மநாபபிள்ளை, மேலாளர் அய்யாபிள்ளை, உள்துறை மணியம் ரமேஷ், மோகன்ராஜ், வள்ளிநாயகம், சிவசுப்பிரமணியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, பக்தி கோ‌ஷங்களை எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.


இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவையொட்டி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) பரஞ்சோதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.


Related Tags :
Next Story