30 சதவீத கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன


30 சதவீத கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 4 July 2017 4:30 AM IST (Updated: 4 July 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

30 சதவீத கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

நாகர்கோவில்,


நாடு முழுவதும் கடந்த 1–ந் தேதி முதல் சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சினிமா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது.

மூடல்


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் 3–ந் தேதி (அதாவது நேற்று) முதல் திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று திரையரங்குகள் மூடப்பட்டன. காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இதேபோல் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், வெள்ளிச்சந்தை, மார்த்தாண்டம், குழித்துறை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து திரையரங்குகளும் நேற்று மூடப்பட்டு இருந்தது. மேலும் திரையரங்குகளின் முன்புறம் இன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டது பற்றிய அறிவிப்பு எழுதி வைத்தும், அச்சிட்டு ஒட்டப்பட்டும் இருந்தது.

ஏமாற்றம்


நாகர்கோவிலில் உள்ள ஒரு திரையரங்கம் முன் ஒட்டப்பட்டு இருந்த அறிவிப்பில், “திரையரங்கின் நுழைவுக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டியும், தமிழக அரசின் 30 சதவீத உள்ளாட்சி வரியை ரத்து செய்யக்கோரியும் இன்று (3–7–2017) முதல் தமிழகம் முழுவதும் திரையரங்கம் காலவரையின்றி மூடப்படுகிறது“ என்று கூறப்பட்டு இருந்தது.

தியேட்டர்கள் மூடப்பட்டது தெரியாமல் சிலர் நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களுக்கு வந்தனர். அதன்பிறகு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Related Tags :
Next Story