குப்பைகளை மக்கும், மக்காதவை என பிரித்து தான் தர வேண்டும்
குப்பைகளை மக்கும், மக்காதவை என தரம் பிரித்து தான் பொதுமக்கள் தர வேண்டும் என்று ஆணையாளர் அனீஷ் சேகர் பேசினார்.
மதுரை,
அடுக்குமாடி வீட்டு உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பில் பிளாஸ்டிக் குப்பை தொட்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர் தலைமை தாங்கினார். பச்சை மற்றும் நீல நிற குப்பை தொட்டிகளை கலெக்டர் வீரராகவராவ் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மதுரை மாநகரை தூய்மையான மாசில்லாத மதுரையாக மாற்றுவதற்காக மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். மாநகரில் உள்ள கால்வாய்கள், நீர்நிலைகள் என எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி தண்ணீர் செல்லமுடியாமல் கொசுக்கள் உற்பத்தியாக ஏதுவாக உள்ளது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 600 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதனை தரம் பிரிப்பதற்கு நிறைய பொருட்செலவு ஏற்படும். எனவே ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதால் குப்பையிலிருந்து உரம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பயனுள்ள பொருட்கள் தயாரிக்க எளிதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆணையாளர் அனீஷ் சேகர் பேசும் போது கூறியதாவது:–
நம் வீடுகளில் சேரும் குப்பைகளை இதுநாள்வரை ஒரே குப்பைத் தொட்டியில் போட்டு வந்துள்ளோம். இந்த நிலைமையை மாற்றி மக்கும் குப்பைகளை பச்சை நிறத் குப்பைத் தொட்டிகளிலும், மக்காத குப்பைகளை நீல நிற குப்பைத் தொட்டிகளிலும் போட வேண்டும். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை எவை எவை என அறிந்து கொள்வதற்காக மாநகராட்சியின் சார்பில் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அதன் பயனை புரிந்து குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும். குப்பைகளை பிரித்து வழங்குவதால் கழிவுகள் கழிவுப் பொருட்களாக இல்லாமல் பயனுள்ள பொருட்களாக பயன்படுத்த முடியும். குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதால் மறு சுழற்சி செய்ய எளிதாக இருக்கும். மேலும் மக்கும் குப்பையிலிருந்து உரமும், மக்காத குப்பையிலிருந்து பயோ ஆயில் தயாரிக்கப்படும். எனவே மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ளவர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி இந்த திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற உதவ வேண்டும் என்றார்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் சதிஷ் ராகவன், உதவி ஆணையாளர் செல்லப்பா, உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், செயற்பொறியாளர் சேகர், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.