மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் ஒரு ஆண்டுக்கு 3 ஆயிரம் டன் மீன் உற்பத்தி
மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் ஒரு ஆண்டுக்கு 3 ஆயிரம் டன் மீன் உற்பத்தி செய்யப்படுகிறது என்று கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் நீர்த்தேக்கம், நீர்ப்பாசனக் கண்மாய்கள், ஊருணி மற்றும் குளங்களாக மொத்தம் 40 ஆயிரத்து 634 எக்டர் பரப்பளவு உள்ளன. இந்த நீர்நிலைகளிலிருந்து ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் டன் மீன் உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் அறிவியல் ரீதியிலான மீன்வளர்ப்பை மேற்கொள்ளவும், மீன் வளர்ப்போரை ஊக்குவித்து ஒட்டு மொத்த உற்பத்தியை மேம்படுத்தவும், சுய வேலை வாய்ப்பை உருவாக்கவும் பல்வேறு திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் தெற்காறு மற்றும் மேல்குண்டாறு உபவடிநிலப்பகுதிகளில் மீன்வளத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண் மீன்விதை வங்கிகள் அமைப்பதற்கு ரூ.4 லட்சம் செலவு ஆகும். அதில் 75 சதவீதம் அரசு மானியமாகவும், 25 சதவீதம் பயனாளிகள் பங்களிப்பாகவும் கொண்டு மீன்வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளீட்டு மானியமாக மீன்குஞ்சுகள், மீன் உணவு, உரம் ஆகியவை வழங்கப்படுகிறது. நீர் நிலைகளில் மிதவைக் கூண்டுகள் நிறுவி மீன் வளர்ப்பு செய்வதற்கு ரூ.15 ஆயிரம் செலவில் மிதவைக் கூண்டுகள் முழு மானியத்தில் வழங்கப்படுகின்றது.
அதே போல் மீன் வளர்ப்பவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி மீனவர் விபத்துக்குழு காப்புறுதித் திட்டத்தின் கீழ் விபத்தில் மரணம் அடைந்தாலோ, நிரந்தர ஊனம் அடைந்தாலோ நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆண்டு காப்பீட்டு பிரிமியமாக மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர் செலுத்த வேண்டிய தொகை ரூ.30ஐ மத்திய, மாநில அரசுகள் சமமாக செலுத்துகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.