ராமநாதபுரம், மண்டபம் பகுதி அரசு பள்ளிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு


ராமநாதபுரம், மண்டபம் பகுதி அரசு பள்ளிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 5 July 2017 4:00 AM IST (Updated: 5 July 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம், மண்டபம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கலெக்டர் நடராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பனைக்குளம்,

கடந்த ஆண்டு நடந்த அரசு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதத்தில் 12–ம் வகுப்பில் 96.77 சதவீதம் பெற்று மாநில அளவில் 2–ம் இடத்தையும், 10–ம் வகுப்பில் 98.16 சதவீதம் பெற்று மாநில அளவில் 3–வது இடத்தையும் பெற்று முந்தைய கல்வியாண்டை காட்டிலும் நல்ல முன்னேற்றம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்தநிலையில் கலெக்டர் நடராஜன் ராமநாதபுரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து நேரிடையாக சென்று கள ஆய்வு செய்தார்.

அதன்படி வாலாந்தரவை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, பெருங்குளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, உச்சிப்புளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, வேதாளை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் அரசு மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வரும் விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் உள்ளிட்டவை அவர்களுக்கு சிரமமின்றி கிடைத்ததா? என்பது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். பின்பு மாணவ, மாணவிகளின் தேர்வு மதிப்பெண் பதிவேடு ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களுக்கு அந்தந்த பாடம் வாரியாக தொடர்ச்சியாக தேர்வுகள் நடத்துவதோடு உடனுக்குடன் தேர்வு தாள்களை திருத்தி மாணவர்களை சுய மேம்பாடு செய்திட உறுதுணை புரிய வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதுதவிர ஆசிரியர்களின் பாடம் நடத்தும் முறைகள் மற்றும் ஆசிரியர்களின் வருகை குறித்து மாணவ, மாணவிகளிடத்தில் கேட்டறிந்ததோடு, கல்வி கற்கும் வயதில் கவனங்களை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி நல்லொழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story