வனப்பகுதிகளில் வனவிலங்குகள் மட்டுமில்லாமல் இயற்கை வளங்களையும் பாதுகாப்பது அவசியம்
வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் மட்டுமின்றி, இயற்கை வளங்களையும் வனச்சரகர்கள் பாதுகாப்பது அவசியம் என்று விஞ்ஞானி அறிவுரை கூறினார்.
ஊட்டி,
ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் உள்ள மத்திய அரசின் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு நிறுவன ஆராய்ச்சி மையத்தில் வன சரகர்களுக்கு ‘வனப்பகுதிகளில் நீர்ப்பிரி முகடுப்பகுதி மேலாண்மை‘ குறித்த 12 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் மராட்டியம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 38 வன சரகர்கள் கலந்துகொண்டு உள்ளனர்.
இந்திய வேளாண் அமைப்பு ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஆசாத் சிங் பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:–
இந்தியாவில் வனப்பகுதிகளில் உள்ள மண் மட்டும் தான் மாசுபடாமல் உள்ளது. மற்ற பகுதிகளில் தொழிற்சாலை கழிவுகள், ஆலை கழிவுகள் ஆகியவற்றால் மண் மட்டுமல்லாமல் நிலத்தடி நீரும் மாசடைந்து உள்ளது. எனவே, வனச்சரகர்கள் வனப்பகுதிகளில் வாழ்ந்து வரும் வனவிலங்குகளை மட்டும் பாதுகாக்காமல் அங்குள்ள மண் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது மிக அவசியம்.
மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு முறைகளை சரியான முறையில் கையாண்டு, வனப்பகுதிகளில் உள்ள நீரை சிறந்த வகையில் பயன்படுத்தி காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி மழைநீர் சேகரிப்பு வழிமுறைகளை வனப்பகுதிகளில் செயல்படுத்துவது வன சரகர்களின் பணியாகும்.
மேலும் ஊட்டி அருகே உள்ள நஞ்சநாடு கிராமத்தில் நீர்ப்பிரி முகடுப்பகுதியில் வனச்சரகர்களுக்கு களப்பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே, வனச்சரகர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.