தனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீடு பள்ளியில் மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடைபெறும்


தனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீடு பள்ளியில் மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடைபெறும்
x
தினத்தந்தி 5 July 2017 2:00 AM IST (Updated: 5 July 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை குலுக்கல் முறையில் நடைபெறும்

நெல்லை,

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை குலுக்கல் முறையில் நடைபெறும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணையதளம் வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேர்க்கைக்கான குழந்தைகளை தேர்வு செய்யும்பணி கடந்த மே மாதம் 31–ந் தேதியன்று அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது.

இந்த சேர்க்கை நடைமுறைகளுக்கு பிறகு காலியாக இருந்த இடங்களுக்கு கடந்த மாதம் 20–ந் தேதி நேரடிச் சேர்க்கை குலுக்கல் முறை மூலம் சேர்க்கை வழங்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இடங்கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் நோக்கிலும், இரண்டாம் கட்டமாக இணையதளம் வழியாக சேர்க்கை நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி வாரியாக காலியாக உள்ள இடங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

மாணவர் சேர்க்கை

இந்த மாணவர் சேர்க்கைக்கு வருகிற 25–ந்தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 28–ந்தேதி பள்ளி வாரியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். 29–ந்தேதி சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு துறை சார்ந்த பிரதிநிதியை நேரில் அனுப்பி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் தகுதியான குழந்தைகளுக்கு ஏற்கனவே கடைபிடிக்கப்பட்ட முறைப்படி சேர்க்கை வழங்கவும், தேவைப்பட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதற்கட்ட சேர்க்கையின் போது முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் மெட்ரிகுலே‌ஷன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், வட்டார வள மையம், அரசு இ–சேவை மையங்களில் இருந்து இணைய தள வழியாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது போன்றே இந்த முறையும் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் பள்ளிக்கு நேரடியாக சேர்க்கைக்கு வரும் பெற்றோர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று பள்ளியிலேயே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இந்த அரிய வாய்ப்பை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.www.dge.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story