சென்னையில் இருந்து சென்ற அரசு பஸ் வாய்க்காலில் கவிழ்ந்து டிரைவர் பலி
சென்னையில் இருந்து சென்ற அரசு விரைவு பஸ் வாய்க்காலில் கவிழ்ந்ததில் டிரைவர் பலியானார். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
சேத்தியாத்தோப்பு,
சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இந்த பஸ்சை கும்பகோணம் அருகே உள்ள நீலாக்கநல்லூரை சேர்ந்த ரவி (வயது 42) என்பவர் ஓட்டிச்சென்றார். பஸ்சில் 35–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் நேற்று அதிகாலை 3.50 மணிக்கு கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சோழத்தரம் என்கிற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த கண்ணாத்தாள் வாய்க்காலில் உள்ள குறுகிய பாலத்தில் பஸ் சென்றபோது, டிரைவர் ரவியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகள் அபாய குரல் எழுப்பினர். விபத்து பற்றி அறிந்ததும் சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பஸ்சின் இடிபாட்டிற்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதில் படுகாயமடைந்த புளியம்பேட்டை ஆனந்தன்(58), அமிர்தம்(42), சோமசுந்தரம், நீடாமங்கலம் விவேகானந்தன்(27), ஆனந்தராஜ்(28) ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அந்த பஸ்சை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.