டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 July 2017 3:45 AM IST (Updated: 5 July 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம்,

உளுந்தூர்பேட்டையை அடுத்த வ.சின்னக்குப்பம் கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் வ.சின்னக்குப்பம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனே திருநாவலூர் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி கடையை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இருப்பினும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான முயற்சியை அதிகாரிகள் கைவிடவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திடீரென அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வ.சின்னக்குப்பத்தில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்களை மாவட்ட கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர்.

அப்போது கலெக்டர் சுப்பிரமணியனிடம் கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்தால் இரு தரப்பினரிடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுபோல் குடிப்பிரியர்களால் பள்ளி– கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.

இதனை கேட்டறிந்த கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story