கர்நாடகத்திற்கு ஏற்படும் அநியாயத்தை சரிசெய்ய ஜனதா தளம்(எஸ்) ஆட்சிக்கு வர வேண்டியது அவசியம்


கர்நாடகத்திற்கு ஏற்படும் அநியாயத்தை சரிசெய்ய ஜனதா தளம்(எஸ்) ஆட்சிக்கு வர வேண்டியது அவசியம்
x
தினத்தந்தி 5 July 2017 2:30 AM IST (Updated: 5 July 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்திற்கு ஏற்படும் அநியாயத்தை சரிசெய்ய ஜனதா தளம்(எஸ்) ஆட்சிக்கு வர வேண்டியது அவசியம் என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்திற்கு ஏற்படும் அநியாயத்தை சரிசெய்ய ஜனதா தளம்(எஸ்) ஆட்சிக்கு வர வேண்டியது அவசியம் என்று குமாரசாமி கூறினார்.

அநியாயத்தை சரிசெய்ய...

காங்கிரசில் இருந்து விலகிய எச்.விஸ்வநாத், பெங்களூருவில் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார். இதில் அக்கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பேசியதாவது:-

தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் கர்நாடகத்திற்கு ஏற்படும் அநியாயத்தை சரிசெய்ய ஜனதா தளம்(எஸ்) ஆட்சிக்கு வர வேண்டியது அவசியம். கர்நாடகத்திற்கு இழைக்கப் படும் அநீதிக்கு எதிராக நமது கட்சி தொடர்ந்து போராடும். எச்.விஸ்வநாத் சேர்ந்துள்ளதால் மைசூரு மாவட்டத்தில் நமது கட்சிக்கு புதிய பலம் கிடைத்துள்ளது.

நேர்மையான அரசியல்வாதி


மைசூருவில் நமது கட்சியின் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் விஸ்வநாத் போட்டியிடுவார். இவர் ஒரு நேர்மையான அரசியல்வாதி. 40 ஆண்டுகள் காலம் காங்கிரசில் நேர்மையான முறையில் பணியாற்றியுள்ளார். தேவேகவுடா தலைமையில் பணியாற்றிய பலர் தலைவர்களாக வளர்ந்துள்ளனர்.

நமது கட்சியிலேயே இருந்து வளர்ந்த சிலர் நமக்கு எதிராக சதி செய்கிறார்கள். அத்தகையவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அனைவரும் கட்சி பணியாற்ற வேண்டும். ஜனதா தளம்(எஸ்) கட்சியில் வளர்ந்த சித்தராமையா, காங்கிரசில் முதல்-மந்திரி ஆகியுள்ளார். காங்கிரசில் அவரை சேர்த்ததே எச்.விஸ்வநாத் என்பதை அவர் மறந்துவிட்டார்.

ஆட்சி அதிகாரத்தின் மீது...

நான் முதல்-மந்தியாக ஆசைப்படுவதாக சித்தராமையா சொல்கிறார். எனக்கு ஆட்சி அதிகாரத்தின் மீது ஆசை இல்லை. மாநிலத்தின் நலன் கருதி ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஆட்சி கர்நாடகத்தில் அமைய வேண்டும். சாதி அடிப்படையில் தேவேகவுடா எப்போதும் அரசியல் செய்தது இல்லை. சிறிய சமூகங்களுக்கு அவர் குரல் கொடுத்துள்ளார்.

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக எச்.விஸ்வநாத் கூறினார். ஆனால் அவருடைய மகன் கூறியதால் அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். அவர் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Next Story