விபத்தில் தொழிலாளி சாவு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் மீண்டும் ஜப்தி


விபத்தில் தொழிலாளி சாவு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் மீண்டும் ஜப்தி
x
தினத்தந்தி 5 July 2017 4:26 AM IST (Updated: 5 July 2017 4:26 AM IST)
t-max-icont-min-icon

நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ்சை மீண்டும் ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் சரவணன் (வயது 24). தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சரவணன் கடந்த 14-10-2010 அன்று பஸ் விபத்தில் பரிதாபமாக இறந்து போனார். தன்னுடைய மகனின் சாவுக்கு நஷ்டஈடு கேட்டு ராஜகோபால் திருவள்ளூரில் உள்ள சிறப்பு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது அவருக்கு நஷ்டஈடாக ரூ.8 லட்சத்து 54 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கடந்த 11-8-2015 அன்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் நஷ்டஈடு வழங்கப்படவில்லை.

அதற்கு வட்டியுடன் நஷ்டஈடு வழங்க வேண்டும் என ராஜகோபால் மீண்டும் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து திருவள்ளூர் சிறப்பு கோர்ட்டு வட்டியுடன் சேர்த்து ரூ.13 லட்சத்தை நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த தொகையும் வழங்கப்படாததால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. அப்போது ஒரு வார காலத்தில் பணம் தருவதாக கூறிவிட்டு அந்த பஸ்சை அதிகாரிகள் எடுத்து சென்றனர். ஆனால் தற்போது வரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை.

நஷ்டஈடு வழங்கக்கோரி திருவள்ளூர் சிறப்பு கோர்ட்டில் ராஜகோபால் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று கோர்ட்டு ஊழியர்கள் திருவள்ளூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி வந்த அந்த அரசு பஸ்சை 2-வது முறையாக ஜப்தி செய்தனர். 

Next Story