கோழிப்பண்ணை அதிபர் குத்திக் கொலை
பாணாவரம் அருகே நிலத்தில் தூங்கிய கோழிப்பண்ணை அதிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
பனப்பாக்கம்
பாணாவரம் அருகே நிலத்தில் தூங்கிய கோழிப்பண்ணை அதிபர் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டார். வட்டிக்கு பணம் கொடுத்த தகராறில் கொலைசெய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பாணாவரத்தை அடுத்த நெரிஞ்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது48) விவசாயி. இவருடைய மனைவி உஷா (42). 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களில் 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. மகன் பரசுராமன் (24) தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வருகிறார்.பிச்சாண்டி தனது விவசாய நிலத்தில் நாட்டுக்கோழி பண்ணை வைத்துள்ளார். மேலும் வட்டிக்கும் பணம் கொடுத்துவந்தார். தினமும் இரவில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு கோழிப்பண்ணை காவலுக்காக நிலத்திற்கு சென்று தங்குவார். வழக்கம்போல நேற்று முன்தினம் பகலில் நிலத்திற்கு சென்றவர் இரவில் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வரவில்லை.
இதனால் இரவில் மனைவி உஷா, பிச்சாண்டிக்கு போன் செய்துள்ளார், அவர் போனை எடுக்கவில்லை. அதனால் அவர் தூங்கியிருப்பார் என்று நினைத்து விட்டுவிட்டார்கள்.இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு உஷா நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கோழிப்பண்ணை அருகில் உள்ள குடிலில் பிச்சாண்டி ரத்த வெள்ளத்தில் படுக்கையில் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பிச்சாண்டியின் கழுத்தில் கத்திக்குத்து காயம் இருந்தது.
உடனடியாக அவர் இதுபற்றி பாணாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கமும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது பன்றிகளை கொல்வதற்கு பயன்படுத்தப்படும் கூர்மையான கத்தியால் குத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
பிச்சாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பாணாவரம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.