தேனியில் குப்பைகள் தீ பிடித்ததால் சாலையில் புகை மூட்டம்
தேனியில் குப்பைகள் தீ பிடித்ததால் சாலையில் புகை மூட்டம் வாகன ஓட்டிகள் அவதி
தேனி,
தேனி நகரில் கொட்டக்குடி ஆற்றுப் பாலத்தை குப்பை கொட்டும் இடமாக பொதுமக்களும், கடைக்காரர்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஆற்றுக்குள் பாலத்தின் ஓரத்தில் கொட்டப்பட்ட குப்பைக்கு நேற்று யாரே தீ வைத்து விட்டனர். இதனால், அங்கு குவிந்து கிடந்த குப்பைகள் தீ பிடித்து எரிந்தன. இதன் காரணமாக அங்கு கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை பரவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி கடந்து சென்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த புகை மூட்டம் பழைய பஸ் நிலையம் வரை பரவியது. சாலையோரம் கடைகள், வணிக வளாகங்களுக்குள்ளும் புகை பரவியது. இதனால் கடைகள், நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள் கண் எரிச்சலால் அவதி அடைந்தனர். பின்னர், பொதுமக்கள் சிலர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். எனவே, இந்த பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும், குப்பைகளில் தீ வைப்பதை தவிர்க்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.