ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு: விசைத்தறி உற்பத்தியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் தொடங்கினர்


ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு: விசைத்தறி உற்பத்தியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் தொடங்கினர்
x
தினத்தந்தி 6 July 2017 4:30 AM IST (Updated: 5 July 2017 11:59 PM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். முதல் நாளான நேற்று ரூ.1 கோடி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

சங்கரன்கோவில்,


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்துக்கு அடுத்தப்படியாக நெசவு தொழில் விளங்கி வருகிறது. இதில் சங்கரன்கோவில் நகரில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சங்கரன்கோவில் விசைத்தறி கூடங்களில் சேலை, கைலி, துண்டு. வேட்டி ஆகிய துணி வகைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கிருந்து சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் துணி வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சங்கரன்கோவிலில் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.


இந்த நிலையில் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த வரி விதிப்பை கண்டித்து கடந்த மாதம் (ஜூன்) 15–ந் தேதி விசைத்தறி உற்பத்தியாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 27, 28, 29 ஆகிய 3 நாட்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 நாட்கள் நடந்த இந்த போராட்டத்தினால் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.


இந்த நிலையில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம், திருமுருகன் சிறு விசைத்தறி கூலி தொழிலாளர் சங்கம், விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம், சிந்தாமணி வட்டார விசைத்தறி நெசவாளர் சங்கம், சுப்புலாபுரம் அறிஞர் அண்ணா சிறு விசைத்தறி உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு திடீரென்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தில் ஜி.எஸ்.டி.யால் விசைத்தறி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. விசைத்தறி தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழு விலக்கு தரும்படி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.


அதன்படி விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் சங்கரன்கோவிலில் விசைத்தறிகள் எதுவும் இயங்கவில்லை. வேலை நிறுத்த போராட்டத்தினால் நேற்று முதல் மட்டும் ரூ.1 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் நாளை (வெள்ளிக்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, 8–ந் தேதி முதல்– அமைச்சரை சந்திப்பது, 10–ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம், கடை அடைப்பு, சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக விசைத்தறி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story