வறட்சியால் வறண்டு கிடந்த முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 13 அடியாக உயர்வு


வறட்சியால் வறண்டு கிடந்த முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 13 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 6 July 2017 4:00 AM IST (Updated: 6 July 2017 12:00 AM IST)
t-max-icont-min-icon

வறட்சியால் வறண்டு கிடந்த முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 13 அடியாக உயர்ந்து இருக்கிறது.

நாகர்கோவில்,

தமிழகத்தில் வறட்சி கோர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது. இதில் குமரி மாவட்டமும் தப்பவில்லை. பருவ மழைகள் சரிவர பெய்யாததால் நாகர்கோவில் நகரின் குடிநீர் ஆதாரமாக திகழும் முக்கடல் அணை நீரின்றி வறண்டு கட்டாந்தரையாக காட்சியளித்தது. அதைத் தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை நகரில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையிலும் தண்ணீர் குறைந்துகொண்டே போனதால் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது பெய்த தென்மேற்கு பருவ மழை ஓரளவு வறட்சியை கட்டுப்படுத்தியுள்ளது. மலையோரங்கள், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை கொட்டியதால் அணைகளுக்கு தண்ணீர் ஓரளவு வந்துகொண்டு இருக்கிறது. இதனால் பேச்சிப்பாறை அணையில் 4 அடியாக இருந்த தண்ணீர் படிப்படியாக உயர்ந்து நேற்றைய நிலவரப்படி 17.5 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.

முக்கடல் அணையை பொருத்த வரையில் அணையின் மொத்த கொள்ளளவு 25 அடி ஆகும். குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தரைமட்டத்தில் இருந்து 25 அடி தோண்டப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் 1 அடிக்கும் கீழ் தண்ணீர் போனால் மைனஸ் (–) 25 என கணக்கிடப்படும்.

இந்த நிலையில் தண்ணீர் இன்றி வறட்டு கிடந்த முக்கடல் அணைக்கும் மழை காரணமாக தண்ணீர் வந்தது. இதனால் வெடிப்பு விழுந்த நிலையில் காணப்பட்ட முக்கடல் அணையின் நீர்மட்டம் தற்போது மைனஸ் 13.20 அடியாக உயர்ந்து இருக்கிறது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் ஓரளவு குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story