சாத்தூரில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் 5–வது நாளாக மூடல்


சாத்தூரில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் 5–வது நாளாக மூடல்
x
தினத்தந்தி 6 July 2017 4:00 AM IST (Updated: 6 July 2017 12:05 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து நேற்று 5–வது நாளாக சாத்தூரில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர்.

சாத்தூர்,

சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, மேட்டமலை, தாயில்பட்டி, மேட்டுப்பட்டி, நாகலாபுரம், சின்னக்காமன்பட்டி, படந்தால் உள்ளிட்ட விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகுதி எந்திரத்தினால் செய்யப்படும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். ஏற்கனவே 6 சதவீதம் பகுதி எந்திரத்தினால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிக்கு வரி விதிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜி.எஸ்.டி. மூலம் 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து கடந்த 1–ந்தேதி முதல் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தன.

இந்தநிலையில் நேற்று 5–வது நாளாக சாத்தூரில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மேலும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் தீப்பெட்டி உரிமையாளர்கள், தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் சாத்தூர் வெம்பக்கோட்டை ரோட்டில் இருந்து புறப்பட்டு தாலுகா அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். பின் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறும்போது, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து வருகிற 10–ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 5 நாட்களில் ரூ.50 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து, கூலியை இழந்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஆர்டர் இல்லாத காரணத்தால் ரூ.60 கோடி மதிப்பிலான தீப்பெட்டிகள் தேங்கியுள்ளன. எனவே மத்திய அரசு உடனடியாக இப்பகுதியில் தொழில் வாழ்வாதாரமான பகுதி எந்திர தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு வரி விதிப்பினை குறைக்க வேண்டும் என்றனர்.


Next Story