சித்ரதுர்கா அருகே பரிதாபம் சாலையோரம் நின்ற டிராக்டர் மீது கார் மோதல்; தம்பதி பலி


சித்ரதுர்கா அருகே பரிதாபம் சாலையோரம் நின்ற டிராக்டர் மீது கார் மோதல்; தம்பதி பலி
x
தினத்தந்தி 6 July 2017 1:30 AM IST (Updated: 6 July 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்கா அருகே சாலையோரம் நின்ற டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியாகினர்.

சிக்கமகளூரு,

சித்ரதுர்கா அருகே சாலையோரம் நின்ற டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியாகினர்.

டிராக்டர் மீது கார் மோதல்

பெலகாவி மாவட்டம் சித்தூரை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 35). இவரது மனைவி சவிதா (29). இந்த தம்பதியின் மகள் சிஞ்சனா (1). இந்த நிலையில் நேற்று முன்தினம் பசவராஜ் தனது மனைவி, குழந்தையுடன் பெங்களூருவில் உள்ள கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் முடிந்ததும் அவர் காரில் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்கள், சித்ரதுர்கா அருகே உள்ள லட்சுமிசாகர் பகுதியில் வந்தபோது, அந்தபகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் பயங்கரமாக மோதியது.

தம்பதி பலி

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதில், காரின் இடிபாடுகளிடையே சிக்கி பசவராஜிம், சவிதாவும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சிஞ்சனா பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து படுகாயமடைந்த சிஞ்சனாவை மீட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பசவசாகர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பசவசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story