ஜி.எஸ்.டி. வரி குறித்து மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும்


ஜி.எஸ்.டி. வரி குறித்து மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 6 July 2017 4:30 AM IST (Updated: 6 July 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரி குறித்து மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும் என புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று புதுக்கோட்டைக்கு வந்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தமிழக காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே 61 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். தற்போது மேலும் 11 பேர் அதிகரித்து 72 மாவட்டமாக பிரிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி தேர்தல் நடத்தப்படும். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் நியமனம் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் ஒப்புதலுடன்தான் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நியமனத்தில் பலருக்கு அதிருப்தி இருந்தால், அதை மேலிடத்தில் கூறி பரிகாரம் தேடி கொள்ளலாம். புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் நெருக்கடியை கவர்னர் கிரண்பெடி ஏற்படுத்தி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக பல முடிவுகளை எடுத்து வருகிறார். கிரண்பெடி மாற்றப்பட வேண்டியவர்.


ஜி.எஸ்.டி. வரி குறித்து மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும். மேலும் உயர்நீதிமன்ற நீதிபதி, பொருளாதார நிபுணர், நிதி செயலாளர் போன்ற 5 பேர் கொண்ட குழு அமைத்து, மக்களிடம் குறைகளை கேட்டு எந்த பொருளுக்கு வரி உயர்த்தலாம், எந்த பொருளுக்கு வரியை குறைக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அந்த அறிக்கையை மத்திய அரசிற்கு, மாநில அரசு அளித்து வரியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

அ.தி.மு.க. தற்போது யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தெரியவில்லை. பலவீனமான அரசாக தமிழக அரசு உள்ளது. சட்டம்-ஒழுங்கு தமிழகத்தில் சரியில்லை. மத்திய அரசு எதை கூறினாலும் அதை பரிசீலனை செய்யாமல் அ.தி.மு.க.வை சேர்ந்த அனைத்து அணிகளும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு அளிக்கின்றன. ஜெயலலிதா எதிர்த்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை தற்போது உள்ள அ.தி.மு.க அரசு ஆதரிக்கிறது. ஏன் என்றால் அவர்களை பா.ஜ.க. மிரட்டுகிறது. அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு என்பது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு நல்லதல்ல.


Related Tags :
Next Story