மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் விபரீத முடிவு ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் விபரீத முடிவு ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 July 2017 1:30 AM IST (Updated: 7 July 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் இந்த விபரீத முடிவை எடுத்தார்.

ஓட்டல் தொழிலாளி

சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 31), ஓட்டல் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி செல்வி (29) என்ற மனைவியும், செல்வபிரியா (4) என்ற மகளும் உள்ளனர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாம். இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதில் கணவன்– மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்– மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு தனது மகளை அழைத்து கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பலமுறை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் செல்வி வரவில்லையாம். இதனால் சுப்பிரமணியன் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் சுப்பிரமணியன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அவரது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதில் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் கரிவலம்வந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சுப்பிரமணியன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.

உடனே போலீசார் சுப்பிரமணியன் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story