திருநின்றவூர் அருகே பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை சாவு
திருநின்றவூர் அருகே பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை பரிதாபமாக இறந்தது. உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று குழந்தையின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள நத்தம்பேடு குமரன் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 34). பகுஜன் சமாஜ் கட்சியின் ஆவடி தொகுதி செயலாளராக பதவி வகித்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (29). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த ராஜேஸ்வரி கடந்த 3-ந் தேதி பிரசவத்திற்காக வெங்கல் போலீஸ் நிலைய எல்லையில் உள்ள புலியூர் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அன்று மாலை 6 மணிக்கு ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு குழந்தை பால் குடிக்கவில்லை என்று பணியில் இருந்த நர்சுகளிடம் ராஜேஸ்வரி கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் அந்த குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுத்து, தடுப்பூசியும் போட்டதாக கூறப்படுகிறது.
சாவு
தாயிடம் பால் குடித்து கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தில் சுய நினைவை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் பதற்றம் அடைந்த ராஜேஸ்வரி தனது குழந்தையை காப்பாற்றுமாறு கதறி அழுதார். உடனடியாக அந்த குழந்தையை திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு நர்சுகள் உதவியுடன் அனுமதித்தனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த தியாகராஜன் தனது குழந்தையின் உடலை வாங்க மறுத்துவிட்டார். மேலும், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உரிய சிகிச்சை அளிக்காததால் தனது குழந்தை இறந்துவிட்டதாக கூறி நேற்று வெங்கல் போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை இறந்து போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story