அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 July 2017 4:15 AM IST (Updated: 7 July 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம்,

ஆயுள் காப்பீடு, வைப்புத்தொகை உள்ளிட்டவைகள் மூலம் தொழிலாளர்களிடம் இருந்து சுரண்டப்பட்ட 7 ஆயிரம் கோடி ரூபாயை மீண்டும் தொழிலாளர்களுக்கே வழங்க வேண்டும், 50 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், இந்த கோரிக்கைகளை நாளை (8-ந் தேதி) சட்டசபையில் நடைபெற உள்ள போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கையில் நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக அனைத்து பணிமனைகளிலும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் வாலிபால் மணி தலைமை தாங்கினார். இதில் தொ.மு.ச. அமைப்பு செயலாளர் வேலு, நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க துணை செயலாளர் ஹரிகரன், அமைப்பு செயலாளர் எட்வின்அமல்ராஜ், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் மூர்த்தி, மறுமலர்ச்சி தொழிற்சங்க இணை செயலாளர் ரவி உள்பட அனைத்து தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.


இதேபோல் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை 1, 2, 3 மற்றும் உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம் ஆகிய பணிமனைகளிலும் நேற்று போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story