தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி டிரைவர் கைது
தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியானார். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை நங்கநல்லூரை சேர்ந்த அமர்நாத் என்பவரது மகன் அனிருத்(வயது 22). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணியை முடித்து விட்டு, தன்னுடன் பணியாற்றும் அம்பத்தூரை சேர்ந்த ராகவேந்திரா(22) என்பவருடன் சாந்தோமில் உள்ள ஒரு நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மயிலாப்பூர் சவுத் கெனால் சாலையில் உள்ள அல்போன்சா மாநகராட்சி விளையாட்டு திடல் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற மாநகராட்சி தண்ணீர் லாரியை முந்திச் செல்வதற்கு ராகவேந்திரா முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது.இதில் மோட்டார்சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த அனிருத் லாரியின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இதில் அனிருத் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். ராகவேந்திரா லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அனிருத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி தண்ணீர் லாரி டிரைவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த மதியழகன்(36) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story