கொடுங்கையூரில் ரசாயன கழிவுநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்


கொடுங்கையூரில் ரசாயன கழிவுநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 7 July 2017 5:00 AM IST (Updated: 7 July 2017 4:23 AM IST)
t-max-icont-min-icon

கொடுங்கையூரில் ரசாயன கழிவுநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பூர், 

கொடுங்கையூர் அடுத்த மாதவரத்தில் 50-க்கும் மேற்பட்ட ரசாயன மற்றும் தோல் பதனிடும் நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதால் சென்னை மாநகராட்சியின் கழிவுநீர் வாரியம் கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய் மூலமாக இந்த கழிவுநீரை கொண்டு சென்று சுத்திகரிப்பு செய்ய முடிவு செய்தது.

இதனையடுத்து ரசாயன கழிவுநீர் குழாய் பதிப்பதற்காக, கொடுங்கையூர் காமராஜர் சாலையில் உள்ள குடிநீர் குழாய்களின் மேலே பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாலைமறியல்

ரசாயன கழிவு நீர் குழாயில் இருந்து கசிவு ஏற்பட்டால், தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, குடியிருப்பு பகுதி வழியாக இந்த குழாய்களை பதிக்காமல் மாற்று வழியில் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை வலியுறுத்தி கொடுங்கையூரில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் அறிவழகன், இன்ஸ்பெக்டர்கள் ஈஸ்வரன், மோகன்ராஜ், பிரகாஷ் மற்றும் கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் நீண்ட நேரமாகியும் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களை மண் போட்டு மூடினார்கள்.

சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story