போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே அவலம்: வேப்பேரியில் போக்குவரத்து சிக்னல் பல நாட்களாக இயங்கவில்லை


போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே அவலம்: வேப்பேரியில் போக்குவரத்து சிக்னல் பல நாட்களாக இயங்கவில்லை
x
தினத்தந்தி 7 July 2017 5:30 AM IST (Updated: 7 July 2017 4:30 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வேப்பேரியில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள சிக்னல் பல நாட்களாக இயங்கவில்லை.

சென்னை,

சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்கு வரத்து சிக்னல் கடந்த 15 நாட்களாக இயங்காமல் காட்சிப் பொருளாக இருக்கிறது.

பூந்தமல்லி நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்புடன் இயங்கும் சாலை என்பதால், ‘சிக்னல் பிரச்சினை’ வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இன்னல்களை ஏற்படுத்தி உள்ளது.

வாகன ஓட்டிகள் சிலர் தாறுமாறாக வாகனங்களை இயக்கி வருவதால் பாதசாரிகள் தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சாலையை கடக்க வேண்டிய நிலை இருக்கிறது. ‘பீக் ஹவர்’ எனப்படும் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் இடைவெளி இல்லாமல் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துக் கொண்டே இருப்பதால் சாலையை கடப்பதற்கு பாதசாரிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் வாகனங்கள் எந்த திசையில் இருந்து வருகிறது என்பதை கணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ஆம்புலன்ஸ் வாகனங்கள்

வாகன ஓட்டிகள் இடையே யார் முதலில் சிக்னலை கடப்பது? என்று நிலவும் போட்டியால் வாகனங்கள் குறுக்கு, நெடுக்காக செல்வதால் போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது காணப்படுகிறது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, ‘சைரன்’ ஒலியை எழுப்பிக் கொண்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரும் போக்குவரத்தை சீர்செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

கோரிக்கை

போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் போலீஸ் உயர் அதிகாரிகள் பணியாற்றும் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள சிக்னல் இயங்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இயங்காமல் இருக்கும் சிக்னலால் விபத்து ஏற்பட்டு அசம்பாதவித சம்பவங்கள் நேரிடும் முன்பே சிக்னலில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை நகரில் பெரும்பாலான போக்குவரத்து சிக்னல்கள் முறையாக இயங்குவது இல்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story