கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 July 2017 4:30 AM IST (Updated: 7 July 2017 4:31 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் நித்யானந்தம், டாஸ்மாக் பணியாளர் சங்க திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் சந்திரன், மாவட்டத் தலைவர் கேசவன், மாவட்டப் பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணியிடம் வழங்க வேண்டும், புதிய கடைகள் திறக்கும் நடவடிக்கையை கைவிட்டு ஏற்கனவே செயல்படும் கடைகளின் எண்ணிக்கையை இறுதிப்படுத்தி தேவையான ஊழியர்கள், உபரி ஊழியர்கள் என வகைப்படுத்த வேண்டும், அனைவருக்கும் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், உபரி ஊழியர்களுக்கு கல்வித்தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் அரசு துறைகளில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் திரளான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற 11-ந் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் தெரிவித்தனர். 

Next Story