புதுச்சேரியில் 6 மாதத்தில் ஆட்சிமாற்றம் அன்பழகன் எம்.எல்.ஏ. சொல்கிறார்


புதுச்சேரியில் 6 மாதத்தில் ஆட்சிமாற்றம் அன்பழகன் எம்.எல்.ஏ. சொல்கிறார்
x
தினத்தந்தி 7 July 2017 5:34 AM IST (Updated: 7 July 2017 5:33 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசாரை ஏமாற்ற நாராயணசாமி நாடகமாடுகிறார். புதுவையில் 6 மாதத்தில் ஆட்சிமாற்றம் நடைபெறும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

கடல் அரிப்பு

ஆளும் காங்கிரஸ் அரசு எந்த திட்டமிடுதலும் இல்லாமல் மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை புதுவை மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறது. தற்போது கடற்கரையில் செயற்கை மணல்பரப்பினை உருவாக்கும் திட்டத்தை ரூ.23 கோடியில் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் முன்பு கடல்சார்ந்த வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்யவில்லை.

கடல் அலையில் ஆண்டுக்கு 4 முறை மாற்றங்கள் ஏற்படும். தற்போது கடல் பகுதியில் கற்களை கொட்டி தூண்டில் முள் வளைவு அமைப்பதால் சோலைநகர், வம்பாகீரப்பாளையம் பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது இந்த நிலை என்றால் மழைக்காலங்களில் கடல்சீற்றம் அதிகமாக இருக்கும். அப்போது கடற்கரை பகுதியில் வாழ வழியில்லாத நிலை ஏற்படும். எனவே கடற்கரையில் செயற்கை மணல் பரப்பினை உருவாக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். கடல் அரிப்பு குறித்து ஆராய்ந்து தீர்வு காணவேண்டும்.

அலட்சியப்போக்கு

சட்டமன்றத்துக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நேரடியாக நியமித்த செயல் ஜனநாயக விரோதமானது. இந்த சூழ்நிலை உருவாக முதல்-அமைச்சர் நாராயணசாமிதான் காரணம். கவர்னர் கிரண்பெடியின் செயல்பாடு மாநில உரிமையை பறிக்கும் விதமாக இருந்து வருகிறது.

அவர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் புகார் தெரிவிக்கவேண்டும் என்று முன்பு நாங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தினோம். ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி அவருக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் ஒரு மாதிரியும், இல்லாவிட்டால் வேறு மாதிரியும் பேசி வருகிறார். ஆட்சியாளர்களின் அலட்சியப்போக்கினால் புதுவை மாநிலத்தின் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது.

காங்கிரசாரை ஏமாற்ற நாடகம்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆதரவு அளிக்கிறார். கவர்னரை கண்டித்து நாளை (சனிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடத்துவது அவசியமற்றது. அதற்காக நாங்கள் இந்த முழுஅடைப்பு போராட்டத்தை எதிர்க்கவில்லை.

மாநில உரிமை பறிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏன் கூட்டவில்லை? தற்போது காங்கிரஸ் கட்சி யினரை ஏமாற்ற அவர் ஏதேதோ நாடகத்தை நடத்துகிறார். இந்த ஆட்சியில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கே பாதுகாப்பு இல்லை. பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலுவின் குடும்பத்தினர்கூட கவர்னரை சந்தித்து தங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கேட்டுள்ளனர். மேலும் பல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் கவர்னர், முதல்-அமைச்சர் என பதவியில் இருப்பவர்களுக்குத்தான் போலீஸ் பாதுகாப்பு உள்ளது.

6 மாதத்தில் ஆட்சி மாற்றம்

காங்கிரசார் எங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக தி.மு.க.வினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். எங்களுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தால் அவர்கள் ஏன் கூட்டணியில் இருக்கிறார்கள்? கூட்டணியைவிட்டு வெளியே போகவேண்டியதுதானே? நாராயணசாமி தலைமையிலான இந்த அரசு மாநில உரிமையை விட்டுக்கொடுத்துள்ளது. எனவே இன்னும் 6 மாதத்தில் புதுவையில் ஆட்சிமாற்றம் வரும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார். 

Next Story