நியமன எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற பா.ஜ.க. தலைவராக சாமிநாதன் தேர்வு
புதுவை நியமன எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற பா.ஜ.க. தலைவராக சாமிநாதன் தேர்வு செய்யப்பட்டார்.
புதுச்சேரி,
புதுவை சட்டமன்றத்துக்கு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. அவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி கடந்த 4ந்தேதி இரவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்தநிலையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் நேற்று சட்டசபைக்கு வந்தனர். அங்கு சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயரை சந்தித்துப் பேசினார்கள். அப்போது அவரிடம் சில கடிதங்களை கொடுத்தனர்.
இந்த சந்திப்புக்குப்பின் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களை பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். மேலும் சட்டமன்ற கூட்ட அரங்கில் எங்களுக்கு இருக்கை மற்றும் சட்டமன்ற வளாகத்தில் அலுவலகம் அமைத்துத்தர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
டெல்லிக்கு பயணம்
அதுமட்டுமல்லாமல் நியமன எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற பா.ஜ.க. தலைவராக என்னை தேர்வு செய்துள்ளனர். இதுதொடர்பாகவும் கடிதம் கொடுத்துள்ளோம். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையும் எங்களுக்கு வழங்கவேண்டும் என்றும் கடிதம் கொடுத்துள்ளோம்.
இப்போது உடனடியாக டெல்லி செல்கிறோம். அங்கு கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள், மூத்த தலைவர்களை சந்திக்க உள்ளோம். அப்போது புதுவை மாநில அரசியல் நிலவரம் குறித்து பேசுவோம்.
இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
Related Tags :
Next Story