கோரைவிலை உயர்வால் பாய்த்தொழில் முடங்கியது
கோரைவிலை உயர்வால் மாதனூர் பகுதியில் பாய்த்தொழில் முடங்கி உள்ளது.
அணைக்கட்டு,
கோரைவிலை உயர்வால் மாதனூர் பகுதியில் பாய்த்தொழில் முடங்கி உள்ளது. இதனால் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏழை முதல் கோடீஸ்வரர் வரை பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளாக கோரைப்பாய் உள்ளது. கோரைப்பாய் தொழிலை குடிசை தொழிலாக அதிகளவில் செய்துவருகின்றனர். ஆம்பூர் தாலுகா மாதனுர் ஒன்றியம் அகரம்சேரியில் சுமார் 500–கும் மேற்பட்டோர் பாய் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் கையால் கோரை பாயை நெசவு செய்து வந்தனர். கடந்த 15–ஆண்டுகளாக விசைத்தறிமூலம் பாய் உற்பத்திசெய்து வருகின்றனர்.இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். பாய் தயாரிக்கபயன்படும் மூல பொருட்களான கோரை, சாயம், நு£ல், நாடா போன்றவைகள் கரூர், சேலம், பவானி பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டு பாய் தயாரிக்கபடுகிறது. அப்போது கோரைக்கட்டு ஒன்றின் விலை ரூ.650–க்கு வாங்கிவந்தனர். அதை நெசவு செய்து ஒருபாயின் விலை ரூ.100–க்கு விற்பனைசெய்தனர்.
இந்த நிலையில் காவிரி படுகையில் கோரை விளைச்சல் கடுமையாக பாதிக்கபட்டதால் கோரை விலை கிடு கிடு என உயர்ந்து கோரை கட்டு ஒன்றின்விலை ரூ.1,750–க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாயம், நு£ல், நாடா போன்றவற்றின் விலையும் உயர்ந்துவிட்டதால் பாய் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த விலை உயர்வால் பாய் ஒன்றின் விலை ரூ.130–க்கு விற்பனைசெய்ய வேண்டும். இந்த விலைக்கு வியாபாரிகள் யாரும் பாய்வாங்க முன்வராததால் உற்பத்தி கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. இதனால் பாய்தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அகரம் சேரியை சுற்றி 50–க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளவர்கள் பாய் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இது குறித்து பாய் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆசைதம்பியிடம் கேட்டதற்கு வாணியம்பாடி, அகரம்சேரி, மேலாலத்துர், கொல்லமங்கலம், பள்ளிகுப்பம், வெட்டுவாணம் ஆகிய பகுதிகளில் பாய் உற்பத்தியாளர்கள் சுமார் 1000 பேர் உள்ளனர். கடந்த 15 நாட்களாக பாய் உற்பத்தி செய்யும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டன. தினக்கூலியாக வேலைபார்கும் சுமார் 5 ஆயிரம் தொழிலாளிகள் வேலையில்லாமல் உள்ளனர். மேலும் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் பாயின் மூலப்பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்ததால் அதை வாங்கி பாய்தயாரித்து சந்தைக்கு கொண்டுசென்றால் பழைய விலைக்கே தரும்படி பொது மக்கள்கேட்கின்றனர். எனவே கோரை விலை வீழ்ச்சியடையும் வரை நெசவு தொழிலை நிறுத்தியுள்ளோம் என்று கூறினார்.