100 நாள் திட்டத்தில் வேலை வழங்காததால் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் மீண்டும் முற்றுகை


100 நாள் திட்டத்தில் வேலை வழங்காததால் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் மீண்டும் முற்றுகை
x
தினத்தந்தி 8 July 2017 4:00 AM IST (Updated: 7 July 2017 10:02 PM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகள் தெரிவித்தபடி 100 நாள் திட்டத்தில் வேலை வழங்காததால் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் மீண்டும் முற்றுகையிட்டனர்.

தேவதானப்பட்டி,

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முதலக்கம்பட்டி ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படும் பணிகளை நம்பியே உள்ளனர். இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு உதவித்தொகை பெறுபவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படமாட்டாது என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இதையடுத்து கடந்த வாரத்தில் அவர்கள் முதலக்கம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு உதவித்தொகை பெறுபவர்களுக்கும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஊராட்சி அலுவலக அதிகாரிகள், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மீண்டும் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணி மற்றும் அதிகாரிகள் பேசினர்.

அப்போது ஊராட்சி பகுதியில் தற்போது வாய்க்கால் சீரமைப்பு, கண்மாய் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளே மேற்கொள்ளப்படுகின்றன. இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களையோ, மாற்றுத்திறனாளிகளையோ ஈடுபடுத்துவது சற்று சிரமத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே அவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. வேறு பணிகள் தொடங்கப்பட்டதும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story