கதிராமங்கலத்தில் குடிநீரில் எண்ணெய் படலம் கலந்து வந்த இடத்தில் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டன கலெக்டர் ஆய்வு
கதிராமங்கலத்தில் குடிநீரில் எண்ணெய் படலம் கலந்து வந்த இடத்தில் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டன. இதனை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணிக்கு குடிநீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் காலை 6 மணிக்கு குடிநீர் திறந்து விடப்பட்டது. அப்போது மணல்மேட்டுத்தெருவில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீரை பிடித்த போது அதில் எண்ணெய் வாடை வீசியது. இதையடுத்து பொதுமக்கள் குடிநீரை பாத்திரங்களில் பிடித்து பார்த்த போது எண்ணெய் படலம் மிதந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கும்பகோணம்– பூம்புகார் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக பள்ளி வாகனங்கள் வந்து நின்றன. இதனை பார்த்த பொதுமக்கள் பள்ளி வாகனங்கள் செல்ல வேண்டும் என்பதற்காக சாலை மறியலை கைவிட்டு விட்டு சாலை ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவிடைமருதூர் தாசில்தார் கணேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் எண்ணெய் படலம் கலந்து தண்ணீர் வந்த குழாயில் இருந்து தண்ணீரை பிடித்து பார்த்தனர். அப்போது அது உறுதியானது. பின்னர் அதிகாரிகள் குடிநீர் தொட்டிக்கு சென்று பார்த்த போது அங்கு தண்ணீர் சுத்தமாக இருந்தது.
இதையடுத்து அதிகாரிகள் எண்ணெய் படலம் வந்த குடிநீர் குழாயில் இருந்து 50 மீட்டர் தொலைவில் மண்ணை தோண்டி குடிநீர் குழாயில் இருந்து தண்ணீரை எடுத்து பார்த்தனர். அங்கு தண்ணீர் சுத்தமாக இருந்தது.
இதையடுத்து தோண்டப்பட்ட இடத்தில் இருந்து குடிநீரில் எண்ணெய் படலம் வந்த பகுதி வரை உள்ள குழாய்களை அகற்றி விட்டு புதிய குழாய்கள் பதிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி உடனடியாக பொக்லின் எந்திரம் வரவழைக்கப்பட்டு தோண்டப்பட்டு புதிய குழாய்கள் பதிக்கப்பட்டன. மேலும் அந்தப்பகுதியில் டிராக்டர்கள் மூலம் குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை குடிநீரில் எண்ணெய் படலம் கலந்து வந்த குழாய் சீரமைப்பு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு புதிய குடிநீர் குழாயில் வரும் தண்ணீரை குடித்து பார்த்தார். மேலும் அங்கு இருந்த பெண்களை அழைத்து குடிநீர் நன்றாக வருகிறதா? என்று கேட்டார். அதைத்தொடர்ந்து அங்குள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்று குடிநீர் பிரச்சினை குறித்து மக்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.