கயத்தாறு அருகே கணவருடன் மொபட்டில் சென்ற பெண் வியாபாரி தவறி விழுந்து சாவு


கயத்தாறு அருகே கணவருடன் மொபட்டில் சென்ற  பெண் வியாபாரி தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 8 July 2017 2:00 AM IST (Updated: 8 July 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே கணவருடன் மொபட்டில் சென்றபோது, சேலை சக்கரத்தில் சிக்கியதால் பெண் வியாபாரி தவறி சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கயத்தாறு,

கயத்தாறு அருகே கணவருடன் மொபட்டில் சென்றபோது, சேலை சக்கரத்தில் சிக்கியதால் பெண் வியாபாரி தவறி சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கருப்புகட்டி வியாபாரி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனாரூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் முருகய்யா. இவருடைய மனைவி சண்முகத்தாய் (வயது 50). விவசாயிகளான இவர்கள் 2 பேரும் கருப்புகட்டி வியாபாரமும் செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக சண்முகத்தாய் காய்ச்சலால் அவதிப்பட்டார்.

எனவே நேற்று காலையில் முருகய்யா, தனது மொபட்டில் மனைவியை அழைத்து கொண்டு, கடம்பூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக அழைத்து சென்றார். அவர்கள் கயத்தாறு அருகே வடக்கு சுப்பிரமணியபுரம் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சண்முகத்தாயின் சேலை மொபட்டின் பின்பக்க சக்கரத்தில் சிக்கியது.

தவறி விழுந்து சாவு

இதனால் நிலைதடுமாறிய சண்முகத்தாய் மொபட்டில் இருந்து தவறி சாலையில் விழுந்தார். பதறிப்போன முருகய்யா மொபட்டை நிறுத்தினார். அவர் சாலையில் விழுந்த சண்முகத்தாயை தூக்குவதற்காக ஓடினார். அதற்குள் தலையில் பலத்த காயம் அடைந்து சண்முகத்தாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தன் கண் எதிரிலேயே மனைவி துடிதுடித்து இறந்ததை பார்த்த முருகய்யா கதறி அழுதார்.

பெரும் சோகம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சண்முகத்தாயின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவருடன் மொபட்டில் சென்றபோது, சக்கரத்தில் சேலை சிக்கியதால் தவறி விழுந்த பெண் வியாபாரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story