ஆகும்பே மலைப்பாதையில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் தடுப்புச்சுவரில் மோதி நின்றது
ஆகும்பே மலைப்பாதையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அரசு பஸ் தடுப்புச்சுவரில் மோதி நின்றது.
சிவமொக்கா,
ஆகும்பே மலைப்பாதையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அரசு பஸ் தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இதில் பஸ்சில் பயணித்து வந்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அரசு பஸ்சிவமொக்காவில் இருந்து உடுப்பி மாவட்டம் மணிப்பால் நோக்கி நேற்று காலையில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். அந்த பஸ் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா ஆகும்பே மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ், மலைப்பாதையில் 12–வது ஊசிக்கொண்டை வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் தாறுமாறாக ஓடிய அந்த பஸ், சாலை தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். ஆனால் மலைப்பாதையில் பஸ் விபத்துக்குள்ளாகி நின்றதால், அச்சாலையில் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பரபரப்புஇதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்துக்குள்ளான அரசு பஸ்சை அப்புறப்படுத்தி சாலையோரத்தில் நிறுத்தினர். பின்னர் போக்குவரத்தை சீரமைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான பஸ்சில் பயணித்து வந்த பயணிகளை, வேறு பஸ்களில் அனுப்பி வைத்தனர்.
மலைப்பாதையில் அரசு பஸ் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.