குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
குமரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பொருட்டு கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை சிறப்புப்பணிகள் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த பணியை அனைத்து மாநிலங்களிலும் தொடங்கி, ‘எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது‘ என்ற கருப்பொருளுக்கிணங்க இளைய வாக்காளர்களை, குறிப்பாக 18-21 வயதுள்ள வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க தற்போது நடைபெறும் தொடர் திருத்தக் காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இச்சிறப்புப்பணியின்போது வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் நிரப்பப்பட்ட படிவங்களை பணி நிறைவுறும் நாளான வருகிற 31-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். மேலும், www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாம்
அதன்படி குமரி மாவட்டத்தில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 23-ந் தேதியில், 18-21 நிறைவடைந்த இளம் வயதினரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் நிரப்பப்பட்ட படிவங்கள் பெறப்படும்.
இப்பணியின்போது இறந்த வாக்காளர்களின் இறப்பு பதிவு செய்யப்பட்ட விவரங்கள் உள்ளாட்சி அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டு அதனடிப்படையில் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். மேலும் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், புதிய புகைப்படங்களை கொடுத்து தெளிவில்லாத மற்றும் மங்கலான புகைப்படங்களை மாற்றம் செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story