கூடலூர் அருகே வீட்டின் சுற்றுச்சுவர், தண்ணீர் தொட்டியை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்


கூடலூர் அருகே வீட்டின் சுற்றுச்சுவர், தண்ணீர் தொட்டியை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 8 July 2017 11:54 AM IST (Updated: 8 July 2017 11:54 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே வீட்டின் சுற்றுச்சுவர், தண்ணீர் தொட்டியை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் அருகே கீழ்நாடுகாணி கிராமம் தமிழக- கேரள மாநில எல்லையில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 4 காட்டு யானைகள் கீழ்நாடுகாணிக்குள் நுழைந்தன. பின்னர் அங்கு இருந்த தென்னை மரங்களை சரித்து போட்டு அட்டகாசம் செய்தன. தொடர்ந்து பலா மரங்களில் உள்ள காய்களை காட்டு யானைகள் சுவைத்து தின்றன.

பின்னர் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை காட்டு யானைகள் சுற்றி வந்தன. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். இந்த சமயத்தில் சீதையம்மாள் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரை காட்டு யானைகள் இடித்து தள்ளின.

அப்போது வீட்டில் தனியாக இருந்த சீதையம்மாள் பயத்தில் அலறினார். மேலும் அவரது வீட்டின் அருகே வசித்து வரும் மகாலிங்கம் என்பவரின் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியையும் காட்டு யானைகள் உடைத்தன.

விரட்டினார்கள்

இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து, சீதையம்மாளை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்கள் கூச்சலிட்டும், தீப்பந்தங்களை ஏந்தியவாறு காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் காட்டு யானைகள் அங்கிருந்து செல்லாமல் கிராம மக்களை விரட்டியன. இதனால் அவர்கள் அச்சம் அடைந்தனர்.

பின்னர் அதிகாலை 5 மணிக்கு காட்டு யானைகளை கிராம மக்கள் விரட்டியடித்தனர். அப்போது காட்டு யானைகள் வனத்துறைக்கு சொந்தமான தாவரவியல் மைய வனப்பகுதிக்குள் சென்றன.

கிராம மக்கள் பீதி

இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, காட்டு யானைகள் வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தரைமட்டமாக்கி விட்டன. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏராளமான பலாக்காய்களை தின்று சேதப்படுத்தி உள்ளன. காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பது இல்லை என்றனர்.

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் கீழ்நாடுகாணி கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் அச்சம்

இதேபோல் தொரப்பள்ளி பகுதியில் முதுமலை வனத்தில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்களை நேற்று முன்தினம் இரவு சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story