திண்டுக்கல்லில் சிறுவனின் மூக்கில் சிக்கிய பிளாஸ்டிக் மோதிரம்


திண்டுக்கல்லில் சிறுவனின் மூக்கில் சிக்கிய பிளாஸ்டிக் மோதிரம்
x
தினத்தந்தி 8 July 2017 6:30 AM GMT (Updated: 2017-07-08T12:00:49+05:30)

திண்டுக்கல் அருகே உள்ள கொட்டப்பட்டி காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். மில் தொழிலாளி.

திண்டுக்கல்,

 இவருடைய மகன் கார்த்திக் (வயது 3). கடந்த ஒரு மாதமாக, சிறுவன் கார்த்திக்கின் மூக்கில் இருந்து அடிக்கடி ரத்தம் வருவதும், பிறகு தானாகவே நின்று விடுவதுமாக இருந்தது. இதையடுத்து சிறுவன் கார்த்திக்கை அவனது பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு, அவனுக்கு சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அதில், சிறுவனுடைய மூக்கில் ஏதோ ஒரு பொருள் சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது என்ன பொருள் என்பது தெளிவாக தெரியவில்லை. இதையடுத்து ‘எண்டாஸ்கோபி‘ முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதனைத்தொடர்ந்து நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதிபிரகாஷ், மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமார் ஆகியோரின் ஆலோசனையின்படி நவீன சிகிச்சை முறையில் அந்த பொருளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கண், காது, மூக்கு சிகிச்சை தலைமை மருத்துவர் ரவி தலைமையில் டாக்டர்கள் யோகானந்த், செந்தில்குமார், மயக்கவியல் டாக்டர் பெக்கி ஆகியோர் சிறுவனுக்கு நவீன முறையில் சிகிச்சை அளித்து சிறுவனின் மூக்கில் சிக்கி இருந்த பொருளை அகற்றியபோது அது பிளாஸ்டிக் மோதிரம் என தெரிந்தது.
அதனைத்தொடர்ந்து சிறுவனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு பின்னர் அந்த சிறுவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவான் என்று டாக்டர்கள் கூறினர். விளையாடும்போது சிறுவன் மோதிரத்தை மூக்கில் செருகியதால் இந்த விபரீதம் ஏற்பட்டது அவனிடம் விசாரித்தபோது தெரியவந்தது.

Next Story